பிரபல நடிகை வீட்டில் கொள்ளை


பிரபல நடிகை வீட்டில் கொள்ளை
x

சென்னையில் பிரபல நடிகை லதாராவுக்கு சொந்தமான பங்களா வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் டி.வி. உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றனர்.

மதுரவாயல்,

பிரபல தமிழ் நடிகை லதாராவ். முதலில் டி.வி. சீரியல்களில் நடித்து வந்த அவர், பின்னர் தில்லாலங்கடி, நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல படங்களிலும் துணை நடிகையாக நடித்து பிரபலம் ஆனவர்.

தில்லாலங்கடி படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

டி.வி. சீரியல்களில் நடித்தபோது தன்னுடன் நடித்த ராஜ்கமல் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார்.

கொள்ளை

இவர்களது வீடு சென்னை மதுரவாயல், கிருஷ்ணா நகர், 15-வது தெருவில் உள்ளது. இந்த நட்சத்திர தம்பதிக்கு சொந்தமாக அதே பகுதியில் பங்களா ஒன்று உள்ளது. இந்த பங்களாவை சினிமா படப்பிடிப்புக்கு வாடகைக்கு விட்டு வருகின்றனர்.

இதற்கிடையே பங்களா வீட்டில் வீட்டு வேலை செய்ய வந்த வேலைக்கார பெண், நேற்று காலை வழக்கம் போல் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது வீட்டில் இருந்த டி.வி., மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து நடிகை லதாராவுக்கு அவர் தகவல் தெரிவித்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

அப்போது வீட்டின் பின்புறம் இருந்த கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் இருந்த டிவி, மின்மோட்டார் உள்ளிட்டவற்றை திருடி சென்றது தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பா.ஜ.க. பிரமுகர் கார்

மேலும் அதே பகுதியில் உள்ள பா.ஜ.க. பிரமுகர் வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டு இருந்த கார் ஒன்றையும் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.


Next Story