மளிகைக்கடை சுவரில் துளையிட்டு பணம், சிகரெட் கொள்ளை


மளிகைக்கடை சுவரில் துளையிட்டு பணம், சிகரெட் கொள்ளை
x
தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே மளிகைக்கடையின் சுவரில் துளையிட்டு பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

மளிகைக்கடை சுவரில் துளை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 43). இவர் மாம்பாக்கம் குறுக்குரோட்டில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் பழனிவேல் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

பின்னர் நேற்று காலையில் பழனிவேல் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பின்பக்க சுவரில் துளையிடப்பட்டு இருந்தது. ஒருவர், உள்ளே சென்று வரும் வகையில் அந்த துளை பெரியதாக போடப்பட்டு இருந்தது.

பணம், சிகரெட் கொள்ளை

கடையின் உள்ளே கல்லாப்பெட்டி திறந்து கிடந்த நிலையில் அதில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை காணவில்லை. மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகளும் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பழனிவேல், உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது, நள்ளிரவில் மர்மநபர்கள் மளிகைக்கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு, அதன் வழியாக உள்ளே சென்று பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகைக் கடையின் சுவரில் துளையிட்டு பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story