தி.மு.க. பிரமுகர் காரில் திருடப்பட்ட ரூ.17 லட்சம் ஆந்திராவில் மீட்பு


தி.மு.க. பிரமுகர் காரில் திருடப்பட்ட ரூ.17 லட்சம் ஆந்திராவில் மீட்பு
x

பாளையங்கோட்டையில் தி.மு.க. பிரமுகர் கார் கண்ணாடியை உடைத்து திருடப்பட்ட ரூ.17 லட்சத்தை போலீசார் ஆந்திராவில் மீட்டனர். அப்போது தப்பி ஓடிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

நெல்லை:

பாளையங்கோட்டை மகாராஜநகரை சேர்ந்தவர் பரமசிவ அய்யப்பன். தி.மு.க. பிரமுகர். இவரிடம் தியாகராஜ நகரை சேர்ந்த துரை (வயது 40) என்பவர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு பரமசிவ அய்யப்பனின் வங்கி கணக்குகளில் இருந்து துரை ரூ.17 லட்சத்தை எடுத்து காரில் வைத்திருந்தார். சமாதானபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் கார் நிறுத்தப்பட்டிருந்தபோது, மர்மநபர்கள் கார் கண்ணாடியை உடைத்து ரூ.17 லட்சத்தை திருடிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து துரை பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் சம்பவ இடத்தில் அதிக நேரம் செல்போன் பேசியவர்களின் விவரங்களும் சேகரித்து விசாரிக்கப்பட்டது.

அப்போது கொள்ளையில் ஈடுபட்டது ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (65) மற்றும் அவருடைய கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ஆந்திராவுக்கு விரைந்து சென்றனர். அங்கு கொள்ளை கும்பலின் நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது சுப்பிரமணியன் தனது கூட்டாளிகள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது மோட்டார் சைக்கிளை காட்டுப்பகுதியில் போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். போலீசார் அவர்களது மோட்டார் சைக்கிளை கைப்பற்றி பார்வையிட்டனர். அதில் ரூ.17 லட்சம் இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த பணத்தை போலீசார் நெல்லைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்தனர். மேலும் கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story