160 வீரர்களுக்கு ரூ.2¼ கோடி ஊக்கத்தொகை, பயிற்சியாளர்களுக்கு பணிநியமன ஆணை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


160 வீரர்களுக்கு ரூ.2¼ கோடி ஊக்கத்தொகை, பயிற்சியாளர்களுக்கு பணிநியமன ஆணை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x

தேசிய, சர்வதேச போட்டியில் சாதித்த தமிழகத்தை சேர்ந்த 160 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2¼ கோடி ஊக்கத்தொகையையும், 76 பயிற்சியாளர்களுக்கு பணிநியமன ஆணையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.

சென்னை

தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றிகளை குவித்த தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பயிற்சியாளர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.

இதில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் 19 தங்கம், 30 வெள்ளி, 20 வெண்கலம் என்று 69 பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 137 வீரர்களுக்கு அரசின் ஊக்கத்தொகையாக ரூ.1 கோடியே 62 லட்சத்துக்கு 50 ஆயிரம், அதே ஆண்டில் நடந்த ஆசிய ஆன்லைன் நேஷன்ஸ் கோப்பைக்கான செஸ் போட்டியில் இந்திய பெண்கள் அணி சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கங்கள் வென்ற பி.வி.நந்திதா மற்றும் ஆர்.வைஷாலி இருவருக்கும் தலா ரூ.6 லட்சம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சம், சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடந்த அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கராத்தே போட்டியில் தனிநபர் பிரிவில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம், ஆண்கள் குழுப்போட்டியில் ஒரு வெள்ளி, பெண்கள் குழுப்போட்டியில் ஒரு வெள்ளி என மொத்தம் 6 பதக்கங்களை வென்ற 11 வீரர்களுக்கு ரூ.19 லட்சம், குஜராத் மாநிலம் காந்தி நகரில் 2021-ம் ஆண்டில் மார்ச் மாதம் நடந்த தேசிய ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில் தனிநபர் பிரிவில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலப்பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் ஒரு தங்கம் மற்றும் குழுப்போட்டிகளில் ஒரு தங்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்ற 9 வீரர்களுக்கு ரூ.21 லட்சத்து 50 ஆயிரம்,

இங்கிலாந்தின் பர்மிங்காமில் கடந்த ஆண்டில் நடந்த காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் பெண்கள் பிரிவின் சேபர் குழுப் போட்டிகளில் வெண்கலப்பதக்கம் கைப்பற்றிய ஜே.எஸ்.ஜெபர்லினுக்கு ரூ.10 லட்சம் என

மொத்தம் 160 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2¼ கோடி ரூபாய் உரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 8 வீரர்களுக்கு ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதே போல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டு பயிற்சியாளர்களுக்கான நேர்முக தேர்வு கடந்த 2-ந்தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த தேர்வில் பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த 187 பயிற்சியாளர்கள் பங்கேற்றனர். தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 76 பயிற்சியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 8 பேருக்கு அவற்றை வழங்கினார்.

நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story