பூந்தமல்லி அருகே போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி நிலம் மோசடி - 3 பேர் கைது


பூந்தமல்லி அருகே போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி நிலம் மோசடி - 3 பேர் கைது
x

பூந்தமல்லி அருகே போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

சென்னை செனாய் நகர், நாதமுனி தெருவில் வசிப்பவர் சந்திரன் (வயது 70). சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1994-ம் ஆண்டு பூந்தமல்லி அடுத்த வரதராஜபுரம் எம்.எம்.டி.ஏ.காலனியில் 1,980 சதுர அடி கொண்ட பிளாட் 18 மற்றும் 2,349 சதுர அடி கொண்ட பிளாட் 19 ஆகிய 2 இடங்களை வெங்கடரத்தினம் என்பவரிடம் இருந்து கிரயம் பெற்று அனுபவித்து வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சந்திரன் தனது இடத்தை பார்ப்பதற்காக சென்றபோது, 19-வது இடத்தில் சுற்றுச்சுவர் அமைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து சந்திரன் பூந்தமல்லி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று வில்லங்கச் சான்று பெற்று பார்த்துள்ளார். அதில், சந்திரன் வாங்கிய இரண்டு இடங்களும் வேறொருவர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சந்திரன் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் பெருமாள் ஆலோசனைப்படி, உதவி கமிஷனர் பொன்சங்கர் மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆவடி கன்னிகாபுரம் காந்தி தெருவை சேர்ந்த தனசேகர் (44) என்பவர் சந்திரன் பெயரில் போலியான ஆவணம் தயாரித்து அதை சென்னை முகப்பேர் தூய லூய ஆலய தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் (50) என்பவருக்கு பவர் கொடுத்தது போன்று ஆள்மாறாட்டம் செய்து கடந்த 2021-ம் ஆண்டு தனசேகர், ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து 18-வது பிளாட்டை அரக்கோணம் பகுதியை சேர்ந்த ஓய்வுப்பெற்ற ஆசிரியர் சம்பத் என்பவருக்கு விற்றுள்ளனர். அதேபோல் 19-வது பிளாட்டை அதே ஆண்டு சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்த ஆதவன் பாலாஜி (48) என்பவருக்கு மோசடியாக விற்றுள்ளனர்.

இதையடுத்து பாலாஜிக்கு தான் வாங்கிய இடம் போலியானது என தெரியவந்ததும், அவர் அந்த இடத்தை வாங்கிய விலையை விட அதிகமான விலைக்கு செல்வரத்தினம் என்பவருக்கு விற்றுள்ளார். இதையடுத்து செல்வரத்தினம் 19-வது பிளாட்டை சுற்றிலும் சுவர் கட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலி ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட தனசேகர், ராமகிருஷ்ணன், ஆதவன்பாலாஜி ஆகிய மூவரையும் கைது செய்து திருவள்ளூர் நில அபகரிப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடியே 20 லட்சம் என்று கூறப்படுகிறது.


Next Story