அரபிக்கடலில் தவறி விழுந்து மாயமான குமரி மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு


அரபிக்கடலில் தவறி விழுந்து மாயமான குமரி மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 March 2024 11:02 AM GMT (Updated: 9 March 2024 12:27 PM GMT)

அரபிக்கடலில் படகில் மீன்பிடிக்கச் சென்றவர்களில் சமையல் பணிக்காகச் சென்ற முஹைதீன், எதிர்பாராதவிதமாக கடலுக்குள் தவறி விழுந்தார்.

சென்னை,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி துறைமுக கடலோர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரபிக்கடலில் படகில் சென்று தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், குளச்சல் "அ" கிராமம், காமராஜ் சாலையைச் சேர்ந்த முஹைதீன் யாசர் அலி (வயது 32) த/பெ. இப்ராஹிம் என்பவர் கடந்த 08.01.2024 அன்று கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கொச்சி துறைமுக கடலோர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அரபிக்கடலில் 163 கி.மீ. வடமேற்கு திசையில் ஆழ்கடலில் படகில் மீன்பிடிக்கச் சென்றவர்களில் சமையல் பணிக்காகச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக படகிலிருந்து கடலுக்குள் தவறி விழுந்துள்ளார். அவரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இதுவரை கண்டுபிடிக்க இயலாமல் காணாமல் போயுள்ளார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள முஹைதீன் யாசர் அலி குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story