நெம்மேலியில் ரூ.4,276 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்


நெம்மேலியில் ரூ.4,276 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 21 Aug 2023 6:18 AM GMT (Updated: 21 Aug 2023 6:52 AM GMT)

நெம்மேலியில் ரூ.4,276.44 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை,

சென்னையில் குடிநீர் பற்றாக் குறையை போக்கும் வகையில் கடந்த 2003-2004-ம் ஆண்டு தொலை நோக்கு திட்டமான கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் படி மீஞ்சூர் காட்டுப்பள்ளி மற்றும் நெம்மேலி என இரண்டு இடங்களில் தினமும் தலா 10 கோடி லிட்டர் (100 மில்லியன் லிட்டர்) கொள்திறன் கொண்ட கடல்நீரை குடி நீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டது.

இதன் மூலம் சென்னை மக்களுக்கு கடல் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இரு சுத்திகரிப்பு நிலையங்களும் சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 20 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்தன.

இந்நிலையில் நெம்மேலியில் 2வது திட்டமாக கடல்நீரை குடிநீராக்கும் நிலையம், எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 15 கோடி லிட்டர் (150 மில்லியன் லிட்டர்) கொள்ளளவு கொண்ட இந்த சுத்திகரிப்பு ஆலையின் பணிகள் ரூ.1516 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் அனைத்தும் இப்போது முடிவுறும் தருவாயில் உள்ளது.

இந்த 2-ம் கட்ட கடல் குடிநீர் திட்டத்தை அடுத்த மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் ரூ.4,276.44 கோடி செலவில் தினமும் 40 கோடி லிட்டர்(400 மில்லியன் லிட்டர்) கடல் நீரை குடிநீராக்கி சுத்திகரித்து வினியோகிப்பதற்காக 3-வது புதிய குடிநீர் ஆலை அமைக்கப்பட உள்ளது.

இந்த புதிய குடிநீர் ஆலை அமைப்பதற்கான இடம் நெம்மேலி அருகே பேரூரில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிநீர் திட்டமான இந்த கடல் குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

இந்த திட்டத்தின் மூலம் தாம்பரம் மாநகர மக்களுக்கும் சென்னையின் தென் மேற்கு பகுதியில் உள்ள 35 பகுதிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட கடல் குடிநீர் வழங்க முடியும். அதாவது இந்த திட்டத்தின் மூலம் 22 லட்சத்து 60 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள். 42 மாதங்களில் இந்த திட்டத்தை முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story