தண்ணீரின்றி வறண்ட ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் தண்ணீர் இன்றி வறண்டு போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் தண்ணீர் இன்றி வறண்டு போனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பெரிய கண்மாய்
தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய கண்மாய்களில் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயும் ஒன்று. சுமார் 19.8 கிலோமீட்டர் நீளமுடைய ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு மதுரை வைகை அணையில் இருந்து திறக்கப்படும் வைகை தண்ணீரானது பார்த்திபனூர் மதகணை வந்து அங்கிருந்து பரமக்குடி, அரசடி வண்டல், கீழ நாட்டா கால்வாய், பாண்டியூர், கொடிக்குளம் உள்ளிட்ட பல கிராமங்கள் வழியாக வருகின்றது.
இந்த கண்மாயிலிருந்து 72 கிராமங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கிறது. கண்மாய்க்கு வரும் தண்ணீரை பயன்படுத்தி சுமார் 100-க்கும் அதிகமான கிராமங்களில் உள்ள சுமார் 12,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. குறிப்பாக இந்த கண்மாய் தண்ணீரை பயன்படுத்தி நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட விவசாயங்களுக்கு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
வறண்டது
இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் போதிய மழை பெய்யாததால் நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட அனைத்து விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது போதிய தண்ணீர் வரத்து இல்லாததால் ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய் தண்ணீர் இன்றி வறண்டு போய் காணப்படுகிறது.
கடந்த ஆண்டு வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் வரை வந்தடைந்தது. அந்த தண்ணீரை பயன்படுத்தி தான் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவை சுற்றிய பெரும்பாலான கிராமங்களில் விவசாயிகள் நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட விவசாயத்திற்கு பயன்படுத்தினர்.
விவசாயிகள் கவலை
தற்போது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயிலும் தண்ணீர் இன்றி முழுமையாக வறண்டு போய் காணப்பட்டு வருகின்றது. 19.8 கிலோ மீட்டர் நீளமுடைய ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய் தண்ணீர் இன்றி வறண்டு போனதால் ஏராளமான இளைஞர்கள் கிரிக்கெட், வாலிபால் உள்ளிட்ட பலவிதமான விளையாட்டுகள் விளையாடும் மைதானமாக மாறிவிட்டது. மேலும் கண்மாயில் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய கண்மாயாக விளங்கும் இந்த கண்மாய் தற்போது வறண்டு போய் காணப்பட்டு வருவதை பார்த்து விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் வைகை தண்ணீர் எப்போது இந்த கண்மாய்க்கு வரும் என எதிர்பார்த்து உள்ளனர்.