ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு நவம்பர் 6-ந்தேதி அனுமதியளிக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
ஆர்.எஸ்.எஸ்.அணிவகுப்பு ஊர்வலத்துக்கு நவம்பர் 6-ந்தேதி அனுமதியளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வருகிற அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ். கமிட்டியை சேர்ந்தவர்கள் அணிவகுப்பும் பேரணியும் நடத்துவதற்கு அனுமதி கோரியிருந்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 50 இடங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், ஐகோர்ட்டு நிபந்தனைகளுடன் பேரணி நடத்த அனுமதி வழங்கியது.
தற்போதைய சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி போலீசார் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளனர். தற்போதைய சட்டம் ஒழுங்கு சூழலில், மத்திய அரசால் 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன.
மாநிலத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள அன்று சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் சில அமைப்புகள் ஊர்வலம், மனித சங்கிலி போன்றவற்றை நடத்த அனுமதி கோரியுள்ளது.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்கவும், கண்காணிக்கவும் காவல் துறையினர் முழு வீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு வருகிற நவம்பர் 6-ந்தேதி அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் அனுமதி வழங்க மறுத்தால் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கு அக்டோபர் 31-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.