தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சாலை மறியல்


தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 July 2023 12:15 AM IST (Updated: 13 July 2023 4:18 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து நேற்று ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

சாலை மறியல்

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் முனியசாமி கோரிக்கை குறித்து விளக்க உரையாற்றினார். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல் வாழ்த்துரை வழங்கினார்.

கோரிக்கைகள்

மாநகராட்சி, நகராட்சி பணிகளை தனியார் மயமாக்கும் அரசாணை எண்.152-ஐ ரத்து செய்து, ஒப்பந்த முறைகளை கைவிட வேண்டும். கடந்த 1.7.2019 முதல் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் தொகுப்பூதிய முறையில் 4 ஆண்டுகளாக பணி புரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியர் சலுகைகள் வழங்க வேண்டும்.

நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 5 ஆண்டுக்கு மேல் இ.பி.எப். கணக்கும், அதற்குரிய வட்டியும் உரியவர் கணக்கில் சேர்க்கப்படவில்லை அதனை சரி செய்து உரியவர் கணக்கில் சேர்க்க வேண்டும். தினக்கூலி தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சியில் ரூ.694-ம், ஓட்டுநர்களுக்கு ரூ.771-ம், ஓ.எச்.டி. ஆப்பரேட்டர்களுக்கு ரூ.732-ம் வழங்க வேண்டும்.

தினக்கூலி ஒப்பந்த பணியாளர்களுக்கு இ.பி.எப். மற்றும் இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு 2022 முதல் இந்த ஆண்டு 2023 வரை ஓய்வு பெற்ற நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது.

கைது

இந்த மறியல் போராட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்க துணைத் தலைவர் சங்கரன், சி.ஐ.டி.யு. நிர்வாகி ஸ்டான்லி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.


Next Story