கடலூா் மாவட்டத்தில் உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்தால் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


கடலூா் மாவட்டத்தில்  உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்தால் நடவடிக்கை  போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 Oct 2022 6:45 PM GMT (Updated: 12 Oct 2022 6:46 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர்


இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கொண்டாட கடலூர் மாவட்ட மக்கள் தயாராகி வருகின்றனர். புது துணிகள் வாங்குவதற்காக ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பட்டாசு விற்பனைக்காக கடைகளும் தயார்படுத்தி வருகின்றனர். உரிமம் வாங்குதல், புதுப்பித்தல் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இருப்பினும் சிலர் உரிமம் இல்லாமல் பட்டாசுகளை வாங்கி விற்பனை செய்வதற்காக ஆன்லைன் மூலம் வாங்கி பதுக்கி வைத்து வருகின்றனர். அப்படி மாவட்டத்தில் பதுக்கி வைத்த 3 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நடவடிக்கை

இது பற்றி போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் அரசு உரிமம் பெறாமல் சட்ட விரோதமாக பட்டாசுகள் பதுக்கி விற்பனை செய்தாலோ, அரசு உரிமம் பெற்று பட்டாசு விற்பனை செய்பவர்கள் அளவுக்கு அதிகமாக பட்டாசுகளை வாங்கி பதுக்கி வைத்திருந்தாலோ உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு வழிமுறைகளின் படி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக பின்பற்ற வேண்டும். அரசு வழிமுறைகளை மீறி, பட்டாசு விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story