தேனியில் நுங்கு, பதனீரை தொடர்ந்து பனம்பழம் விற்பனை
தேனியில் நுங்கு, பதனீரை தொடர்ந்து பனம்பழம் விற்பனை சூடுபிடித்துள்ளது.
'கற்பகத்தரு' என்று அழைக்கப்படும் பனை மரம் பல்வேறு பலன்களை கொடுக்கிறது. பனை மரத்தில் இருந்து பதனீர், நுங்கு, பனம்பழம் போன்றவை மனிதர்களுக்கு உணவுப்பொருட்களாக கிடைக்கின்றன. அத்துடன் பனை விதைகளை விதைத்து அறுவடை செய்யும் பனங்கிழங்கும் மனிதர்கள் விரும்பி உண்ணும் பாரம்பரிய உணவுப் பொருளாக உள்ளது. பனம் பழத்தில் இருந்து பழச்சாறு, பாயசம், அல்வா போன்றவை தயாரித்தும் பயன்படுத்தலாம்.
இருப்பினும் பனை நுங்கு, பதநீர் பயன்பாடு அளவுக்கு பனம்பழம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. இந்தநிலையில் தேனி, அரண்மனைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பனம்பழம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பதனீர், நுங்கு விற்பனை செய்பவர்கள் அதோடு சேர்த்து பனம்பழமும் விற்கப்படுகிறது. முழு பழமாகவும், வெட்டிய துண்டுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பழம் ரூ.50-க்கு விற்பனையாகிறது. மக்களும் ஆர்வத்துடன் அதை வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து அரண்மனைபுதூரில் பனம்பழம் விற்பனையில் ஈடுபட்ட வியாபாரியிடம் கேட்டபோது, "சமீபகாலமாக நுங்கு, பதனீர் வாங்க வரும் மக்கள் சிலர் பனம்பழம் கிடைக்குமா? என்று கேட்டபடி இருந்தனர். இதனால், பனம்பழத்தையும் விற்பனை செய்ய தொடங்கி விட்டோம். கனிந்த பழத்தை அப்படியே சாப்பிடலாம். நெருப்பில் சுட்டும் சாப்பிடலாம். செங்காயாக இருக்கும் பழத்தை துண்டு தூண்டாக நறுக்கி கருப்பட்டி சேர்த்து அவித்தும் சாப்பிடலாம்" என்றனர்.