சேலம் மாநகராட்சி பகுதிகளில்14 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை
சேலம் மாநகராட்சி பகுதிகளில்14 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டது.
சேலம் மாநகராட்சி என்.ஜி.ஜி.ஓ. கூட்டுறவு பண்டக சாலையில் முதற்கட்டமாக மலிவு விலையில் தக்காளி விற்பனையை வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. நேற்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சேலம் மாநகராட்சி தில்லை நகர், சுப்பிரமணியநகர், தாதம்பட்டி, சாமிநாதபுரம், சீரங்கபாளையம் உள்பட 14 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு தக்காளி கிலோ 60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேளாண் துறை அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதன் மூலம் நுகர்வோர்களும், விவசாயிகளும் பயன்பெறும் வகையில் காய்கறிகளை அதிக அளவில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.