சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா: விடிய விடிய பொங்கல் வைத்து வழிபாடு


சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவையொட்டி விடிய, விடிய பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். குகை, அம்மாபேட்டையில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சேலம்

கோட்டை மாரியம்மன்

சேலம் மாநகரில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களுக்கும் தாய் கோவிலாக கோட்டை மாரியம்மன் கோவில் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் கடந்த மாதம் 26-ந் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கியது. தொடர்ந்து கோவிலில் தினமும் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 8-ந் தேதி சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் நேற்று முன்தினம் தொடங்கியது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து விடிய, விடிய பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இதற்காக கோவில் பின்புறம் சிறப்பு வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும், பக்தர்கள் சிலர் மாவிளக்கு மற்றும் பூங்கரகம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.

பக்தர்கள் கூட்டம்

மாவட்டத்தில் நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்ததால் காலையில் இருந்தே கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. 2-வது நாளாக நேற்றும் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தியதை காணமுடிந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

இதுதவிர, தீச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவிலில் டவுன் உதவி கமிஷனர் வெங்கடேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் வைபவம் நடைபெறுகிறது.

தீமிதி விழா

சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் நேற்று காலை தீமிதி விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டனர்.

களரம்பட்டி புத்து மாரியம்மன் கோவிலில் நேற்று காலை மேளதாளங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம், நாக நந்தினி அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலையில் பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர்.

குகை மாரியம்மன்

இதேபோல், அம்மாப்பேட்டை பலப்பட்டறை மாரியம்மன் கோவிலிலும் தீ மிதித்தல் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தி கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். மேலும், குகை மாரியம்மன், காளியம்மன் கோவிலிலும் நேற்று இரவு தீ மிதிவிழா நடந்தது. இதில், விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

செவ்வாய்பேட்டை மாரியம்மன், நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், சின்னக்கடைவீதி சின்ன மாரியம்மன், அய்யந்திருமாளிகை மாரியம்மன் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களிலும் நேற்று சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

சாமிநாதபுரம்

சேலம் சாமிநாதபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. கோவிலில் சிவலிங்க அபிஷேக கோலம், உமாமகேஸ்வரி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனை பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

சேலம் மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா களை கட்டி உள்ளது. இதனால் எந்த வீதியில் பார்த்தாலும் கோவிலில் திருவிழா நடந்து வருவதும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்தவாறு கூட்டமாக இருப்பதால் மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

அன்னதானப்பட்டி

சேலம் அன்னதானப்பட்டி சுயம்பு மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 9-ந்தேதி சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் அர்ச்சகர் கல்யாணசுந்தரம், சக்தி கரகம் எடுத்து வந்தார். பின்னர் மாரியம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சக்தி அழைத்தல் நிகழ்ச்சியில் கோவில் கட்டளைதாரர்கள் செல்வம், பைந்தமிழ்வேந்தன், மூர்த்தி, முத்துகுமார், வேலவன், பிரபாகரன், சதீஸ், மணிவண்ணன், தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஏராளமான பெண்கள் கோவிலுக்கு முளைப்பாரி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இன்று வண்டிவேடிக்கை நிகழ்ச்சி

சேலம் மாநகரில் ஆடி மாதத்தில் பல்வேறு கோவில்களில் ஆடித்திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின்போது, குகை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் நடக்கும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சியானது சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. கோவிலில் இந்த ஆண்டு ஆடித்திருவிழா நடைபெற்று வரும் நிலையில் முக்கிய நிகழ்வான வண்டி வேடிக்கை நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறுகிறது.

இதில், கண்ணை கவரும் வகையில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் கடவுள் வேடம் அணிந்தவர்கள், மக்கள் கூட்டத்தில் வலம் வந்து ஆசி வழங்குவது தான் வண்டி வேடிக்கை நிகழ்வின் சிறப்பம்சம் ஆகும். பெரும்பாலும் புராண கதைகளில் வரும் நிகழ்வுகள் நாடகமாக நடித்து காட்டப்படும். ஆனால் பெண்கள் இந்த வண்டி வேடிக்கையில் பங்கு பெறுவதில்லை. ஆண்களே பெண் வேடமிட்டு வருவர். அலங்கார வண்டிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து குகை கோவிலுக்கு வந்து செல்லும். குகை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் நடக்கும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை காண திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story