உழவர் சந்தைகளில் ஒரே நாளில் 10 டன் தக்காளி விற்பனை


தினத்தந்தி 12 July 2023 12:30 AM IST (Updated: 12 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

உழவர் சந்தைகளில் கிலோரூ.90-க்கு விற்றதால் நேற்று ஒரே நாளில் 10 டன் தக்காளி விற்பனையானது. காய்கறி விலை உயர்வால் உக்கடம் மார்க்கெட் வெறிச்சோடியது.

கோயம்புத்தூர்

உழவர் சந்தைகளில் கிலோரூ.90-க்கு விற்றதால் நேற்று ஒரே நாளில் 10 டன் தக்காளி விற்பனையானது. காய்கறி விலை உயர்வால் உக்கடம் மார்க்கெட் வெறிச்சோடியது.


உழவர் சந்தைகள்


நாடு முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வெளிமார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ ரூ.110 முதல் ரூ.130 வரை விற்கப்படுகிறது. ஆனால் கோவை ஆர்.எஸ்.புரம், சிங்கா நல்லூர், வடவள்ளி ஆகிய 3 உழவர் சந்தைகளில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்கப்பட்டது. எனவே பொதுமக்கள் ஆர்வமுடன் தக்காளி வாங்கி சென்றனர். இதன் மூலம் உழவர் சந்தைக ளில் ஒரே நாளில் 10 டன் தக்காளி விற்றது. இது குறித்து வேளாண்மை வணிக பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-


காய்கறி விலை குறைவாக இருப்பதால் ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், வடவள்ளி ஆகிய 3 உழவர் சந்தைகளில் கடந்த ஒரு வாரமாக காய்கறிகள் விற்பனை அதிகரித்து உள்ளது. வெளி மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.120 வரையும், சின்னவெங்கா யம் ரூ.200-க்கு மேல் விற்பனையாகிறது.


10 டன் தக்காளி விற்பனை


ஆனால் உழவர் சந்தையில் நேற்று தக்காளி ரூ.90-க்கும், நேற்று முன்தினம் ரூ.80-க்கும், சின்னவெங்காயம் ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது.

இன்று (நேற்று) ஒரே நாளில் ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் 3½ டன், சிங்காநல்லூரில் 4½ டன், வடவள்ளி யில் 2 டன் என மொத்தம் 10 டன் தக்காளி விற்பனையானது.


சின்ன வெங்காயம் சிங்காநல்லூரில் 5 டன், ஆர்.எஸ்.புரத்தில் 3 டன் விற்பனையானது. தற்போது தொண்டாமுத்தூர், நரசீபுரம், பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி தொடங்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு மாதம் கழித்து சின்ன வெங்காயம் விலை குறையும். இவ்வாறு அவர் கூறினார்.


வெறிச்சோடிய உக்கடம் மார்க்கெட்


உக்கடம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி, சின்னவெங்காயம், இஞ்சி உள்பட காய்கறிகள் விலை அதிகமாக உள்ளது. இதனால் அங்கு காய்கறிகள் வாங்க கூட்டம் குறைவாக இருந்ததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

அங்கு தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.100- ரூ.120, இஞ்சி ரூ.260, கேரட் ரூ.60- ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனையாகிறது.

காய்கறிகளின் விலை அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.



Next Story