உப்பு உற்பத்தி தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?


உப்பு உற்பத்தி தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
x

உப்பு உற்பத்தி செய்யும் பல ஆயிரம் குடும்பங்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா? என்ற எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள் உள்ளனர்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

உப்பு உற்பத்தி செய்யும் பல ஆயிரம் குடும்பங்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா? என்ற எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள் உள்ளனர்.

உப்பு நிறுவனம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகின்றது. அதற்கு அடுத்தபடியாக கல் உப்பு உற்பத்தி செய்யும் தொழிலும் மாவட்டத்தில் பல ஊர்களில் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்திலேயே சாயல்குடி அருகே வாலிநோக்கம் பகுதியில் அரசு உப்பு நிறுவனம் ஒன்றும் செயல் பட்டு வருகின்றது. அரசுஉப்பு நிறுவனத்துக்கு சொந்தமாக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் உப்பள பாத்திகள் உள்ளன. இதை தவிர வாலிநோக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் உப்பள பாத்திகளும் உள்ளன. வாலிநோக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த உப்பள பாத்திகளை நம்பி சுமார் 4000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

வாலிநோக்கம் பகுதியை தவிர்த்து ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி, ஆனைகுடி, மற்றும் தேவிபட்டினம் அருகே கோப்பேரி மடம், திருப்பாலைக்குடி, உப்பூர், பத்தனேந்தல், சம்பை உள்ளிட்ட ஊர்களிலும் பல நூறு ஏக்கர் பரப்பளவில் உப்பள பாத்திகள் உள்ளன. இந்த உப்பள பாத்திகளை நம்பி சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

4 மாதங்கள்

ஆண்டுதோறும் கல் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் பிப்ரவரி மாதம் தொடங்கி அக்டோபர் மாத தொடக்கத்திலேயே முடிவடைந்து விடும்.அதிலும் குறிப்பாக மார்ச் முதல் ஜூன் மாதம் வரையிலும் இந்த 4 மாதங்கள் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்பதால் கல் உப்பு உற்பத்தி மிக அதிகமாகவே இருக்கும். கல் உப்பு உற்பத்திக்கு முதல் எதிரி மழை தான். மழை பெய்யும் பட்சத்தில் பாத்திகள் முழுவதும் மழை நீர் தேங்கி கல் உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டு விடும் என்று தான் சொல்ல வேண்டும்.

கல் உப்பு உற்பத்தி அதிகமாக விளைச்சல் ஆவதற்கு முக்கிய காரணியாக இருப்பது வெயில் தான்.வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கல் உப்பு விளைச்சலும் அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் இந்த கல் உப்புகள் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் லாரி மூலம் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகின்றன. இதைத்தவிர தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து கப்பல்களில் ஏற்றி வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. கல் உப்பாக லாரிகளில் ஏற்றி அனுப்பப்படுவதோடு மட்டுமில்லாமல் கல் உப்புகளை பாக்கெட்டுகளில் அடைத்து ஒரு கிலோ பாக்கெட்டுகளாகவும் அனுப்பப்படுகின்றன. வாலிநோக்கத்தில் செயல்படும் அரசு உப்பள பாத்திக்கு சொந்தமான நிறுவனத்தில் கல் உப்புகள் எந்திரங்களில் அரைத்து அயோடின் சால்ட் ஆகவும் பாக்கெட்டுகளில் பேக்கிங் செய்தும் தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கோடைகால சீசனில் ஒரு டன் உப்பு சராசரியாக 2,000 ரூபாய்க்கு விலை போகும். இதே ஒரு டன் உப்பு மழை கால சீசனில் ரூ.4,000 வரை விலை போகும் என்று கூறப்படுகிறது. இதனால் மழைக்கால சீசனில் கல் உப்புக்கு கடும் கிராக்கி ஏற்படும் என்றும் கூறப்படுகின்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வாலிநோக்கம், திருப்புல்லாணி, ஆனைக்குடி, உப்பூர் திருப்பாலைக்குடி உள்ளிட்ட பல ஊர்களில் உப்பள தொழிலை நம்பி 10,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த உப்பள பாத்திகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தினமும் காலை 6 மணிக்கு சென்று விட்டு பகல் 2 மணிக்கு வேலை முடிந்து வீடுகளுக்கு செல்வது வழக்கம். இவ்வாறு உப்பளப் பாத்திகளில் வேலை பார்க்கும் தொழிலாளர் ஒருவருக்கு சம்பளமாக ரூ.400 வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சலுகை

இதை தவிர்த்து இந்த உப்பள பாத்திகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு கூடுதல் சம்பளமோ சன்மானமோ அரசு மூலம் எந்த ஒரு சலுகைகளும் நிவாரணமும் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று தொழிலாளர்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது பற்றி ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பள பாத்தி ஒன்றில் வேலை பார்க்கும் தொழிலாளி ஒருவர் கூறியதாவது:- காலை 6 மணிக்கு பாத்திக்கு வேலைக்கு வந்து விடுவோம். வேலை முடிய பகல் 3 மணி ஆகிவிடும். நாள் முழுவதும் கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் பாத்தியில் இறங்கி கல் உப்பை பிரித்தெடுத்து அதை பாதுகாப்பாக கொண்டு வந்து குவித்து வைத்து லாரியில் ஏற்றி விடுவோம்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பாத்திகளில் இறங்கி வேலை பார்த்தும் எங்களுக்கு எதிர்பார்த்த அளவு சம்பளம் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். தற்போதுள்ள விலைவாசி உயர்வில் ஒரு நாளைக்கு ரூ. 400 சம்பளம் என்பது ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு போதுமானதாக இல்லை.

நிவாரணம்

ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள பல ஊர்களில் உள்ள உப்பள பாத்திகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு அரசு தனியாக நல வாரியம் அமைத்து மாதம் தோறும் நிவாரணம் வழங்குவதற்கும் மற்றும் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உரிய சம்பளம் கிடைப்பதற்கும் குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் வேலை பார்க்க முடியாமல் வீடுகளில் இருக்கும் தொழிலாளர்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story