கல் உப்பின் விலை உயருமா?


கல் உப்பின் விலை உயருமா?
x

கல் உப்பின் விலை உயருமா? என்று வியாபாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

ராமநாதபுரம்

தேவிபட்டினம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி செய்யும் தொழிலும் அதிகமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி, உப்பூர், சம்பை, பத்தனேந்தல், திருப்புல்லாணி, ஆனைகுடி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு ஊர்களிலும் ஏராளமான உப்பளப்பாத்திகள் உள்ளன. ஆண்டுதோறும் பிப்ரவரி மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும் உப்பு உற்பத்தி செய்யும் சீசன்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள கோப்பேரிமடம் பகுதியில் ஏராளமான உப்பள பாத்திகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி நடந்து வருவதை தொடர்ந்து கோப்பேரிமடம் பகுதியில் உள்ள உப்பள பாத்திகள் முழுவதும் மழை நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. ஏற்கனவே பாத்திகளில் இருந்து சேகரித்து வைக்கப்பட்டுள்ள கல் உப்புகள் அனைத்தும் மழை நீரில் நனைந்து வீணாவதை தடுக்கும் வகையில் தார்ப்பாயால் மூடி வைக்கப்பட்டு உள்ளன. அவ்வப்போது இந்த கல் உப்பு லாரி மூலம் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. மழை சீசன் முடியும் வரையிலும் கல் உப்புக்கு கடும் கிராக்கி ஏற்படும் என்றும் விலையும் உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த அக்டோபர் மாதம் வரையிலும் ஒரு டன் ரூ.2000 வரையிலும் விலை போன கல் உப்பு ரூ. 3000, 3500, 4000 என விலை உயரக்கூடும் என்றும உப்பு உற்பத்தியில் ஈடுபடும் வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story