நவராத்திரி விழாவுக்கு சென்று திரும்பிய சாமி சிலைகள் பத்மநாபபுரம் அரண்மனையை வந்தடைந்தது
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்கு சென்று திரும்பிய சாமி சிலைகள் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்த போது, துப்பாக்கி ஏந்தி போலீசார் மரியாதை அளித்தனர்.
தக்கலை:
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்கு சென்று திரும்பிய சாமி சிலைகள் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்த போது, துப்பாக்கி ஏந்தி போலீசார் மரியாதை அளித்தனர்.
சாமி சிலைகள்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் 23-ந் தேதி பத்மநாபபுரம் அரண்மனை தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் ஆகிய சாமி சிலைகள் புறப்பட்டு சென்றன. அங்கு 26-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை பூஜைகள் நடந்தன. ஒரு நாள் ஓய்வுக்கு பின், கடந்த 7-ந்தேதி திருவனந்தபுரத்தில் இருந்து குமரி மாவட்டம் நோக்கி புறப்பட்ட சாமி சிலைகள் நேற்று முன்தினம் களியக்காவிளைக்கு வந்தன.
அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு குழித்துறையில் தங்கி விட்டு நேற்று காலையில் குழித்துறை மகாதேவர் கோலில் இருந்து சாமி சிலைகள் புறப்பட்டன. மார்த்தாண்டம், சாமியார்மடம், அழகிய மண்டபம், பரைக்கோடு, மணலி, சாரோடு வழியாக வந்த சாமி சிலைகளுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அரண்மனைக்கு வந்தது
பின்னர் பத்மநாபபுரம் அரண்மனை கோட்டை வாசல் வந்த சாமி சிலைகளை பத்மநாபபுரம் பகுதி பக்தர்கள் தாலபொலிவுடன் மலர்தூவி பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து பத்மநாபபுரம் ரதவீதியில் வந்த சாமிகளில் வேளிமலை முருகபெருமான் வடக்குதெரு வழியாக குமாரகோவிலுக்கு புறப்பட்டு சென்றது,
சரஸ்வதிதேவியும், முன்னுதித்த நங்கையம்மனும் தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் கோவிலை வந்தடைந்தபோது தமிழக, கேரள மாநில போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செய்தனர். அதைத்தொடர்ந்து மன்னரின் உடைவாள் பத்மநாபபுரம் அரண்மனைக்கு கொண்டுசெல்லப்பட்டு உப்பரிகை மாளிகையில் உள்ள பூஜை அறையில் வைக்கப்பட்டது. யானைமீது அமர்ந்து வந்த சரஸ்வதி அம்மன் விக்ரகத்திற்கு அரண்மனையில் உள்ள ஓமப்புரைக்குளத்தில் வைத்து ஆராட்டு நடத்தப்பட்டு தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் கோவில் கருவறையில் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நேற்றிரவு பத்மநாபபுரத்தில் தங்கிவிட்டு இன்று அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு சுசீந்திரம் வந்து சேருகிறது.