மரத்தை வெட்டியபோது சாமி சிலைகள் சேதம்


மரத்தை வெட்டியபோது சாமி சிலைகள் சேதம்
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:45 PM GMT)

சின்னசேலம் அருகே மரத்தை வெட்டியபோது சாமி சிலைகள் சேதம் அடைந்ததை கண்டித்து பக்தர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராம எல்லையில் கன்னிமார் கோவில் உள்ளது. இதை சேலம் மாவட்டம் ஊனத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் சமூகத்தினர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இரு தரப்பு பிரச்சினை காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக வழிபாடு நடத்த முடியாமல் இருந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அனுமதியுடனும், கோர்ட்டு உத்தரவின் அடிப்படையிலும் கடந்த 8-ந்தேதி கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிலில் வளர்ந்திருந்த மரத்தை யாரோ மர்ம நபா்கள் வெட்டியுள்ளனர். இதில் மரம் விழுந்து அங்கிருந்த சாமி சிலைகள் சேதமடைந்தன. இதைப்பார்த்து ஆத்திரமடைந்த ஊனத்தூர் கிராமத்தை சேர்ந்த கோவில் வழிபாட்டு குழுவினர் சாமி சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி அந்த பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த சின்னசேலம் தாசில்தார் கமலக்கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார், அலுவலா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மரத்தை வெட்டி சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story