தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்


தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 11 July 2023 9:33 PM GMT (Updated: 12 July 2023 11:32 AM GMT)

பிடித்தமின்றி முழுமையாக சம்பளம் வழங்கக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

பிடித்தமின்றி முழுமையாக சம்பளம் வழங்கக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாநகர தூய்மை பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த 200 பேர் நேற்றுகாலை 10 மணிஅளவில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்தில், தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியை ரூ.550-ல் இருந்து ரூ.650 ஆக உயர்த்தி கொடுக்க மாவட்ட கலெக்டரின் செயல்முறை ஆணையை உடனே வழங்க வேண்டும். மாநகர தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்திற்கு தெரிவிக்காமல் புதிய தூய்மை பணியாளர்களை நியமிக்கக்கூடாது.

தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.550 தினக்கூலியில் ரூ.50-யை பிடித்தம் செய்து புதிதாக சேர்க்கப்படும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கக்கூடாது. பிடித்தமின்றி முழுமையாக சம்பளம் வழங்க வேண்டும். 2 மாத காலமாக முழுமையான சம்பளத்தை தராமல் பிடித்தம் செய்துள்ள இ.பி.எப்., இ.எஸ்.ஐ. விவரத்தையும், சம்பள விவரத்தையும் ரசீது ஆகவும், 300 பேரின் பெயர் விவரங்களையும் வழங்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

பணிக்கு தேவையான கையுறைகள், உடைகள் 3 ஜோடி, உபயோக பொருட்களான கூடை, மண்வெட்டி, கடப்பாரை, காலணி, மழைக்கோட்டு ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கொடுத்து சம்பளமும் சேர்த்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.வெயிலையும் பொருட்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடும்ப அட்டையை, வங்கி கணக்குடன் இணைக்காமல் இருப்பது தான் இந்த பிரச்சினைக்கு காரணம். இன்னும் ஒரு வாரத்தில் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என கூறினார்.

கைது செய்வோம்

பின்னர் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. எவ்வளவு நேரமானாலும் கலெக்டரை நேரில் சந்தித்து பேசிவிட்டு தான் கலைந்து செல்வோம் என தெரிவித்தனர். போராட்டத்தை தொடர்ந்தால் கைது செய்வோம் என போலீசார் கூறியபோது, கைது செய்தாலும் பரவாயில்லை என கூறினர். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்லாமல் அப்படியே கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.சங்க நிர்வாகிகள் சிலர் மாநகராட்சி ஆணையர் சரவணனை சந்தித்து பேசியபோது ஏற்பட்ட உடன்பாடு காரணமாக பிற்பகல் 2 மணி அளவில் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story