வியாபாரி இறந்த வழக்கில் திருப்பம்.. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காரை ஏற்றி கொன்ற கொடூரம்


வியாபாரி இறந்த வழக்கில் திருப்பம்.. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காரை ஏற்றி கொன்ற கொடூரம்
x

ஆள் நடமாட்டம் இல்லாத மற்றும் கண்காணிப்பு கேமரா இல்லாத இடமாக பார்த்து பிரேம்குமார் மீது காரை ஏற்றி உள்ளனர்.

சென்னை:

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 37). வில்லிவாக்கம் பகுதியில் பழைய இரும்பு மற்றும் பேப்பர் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு பிரேம்குமார், வில்லிவாக்கத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியதால் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிவந்த அயனாவரத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (35) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனால், பிரேம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பிரேம்குமார் மீது காரை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது.

பிரேம்குமாரின் மனைவி சன்பிரியாவுக்கும், அரிகிருஷ்ணனுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இருவரும் பிரேம்குமாருக்கு தெரியாமல் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் தெரிந்த பிரேம்குமார், மனைவியை கண்டித்தார்.

மேலும் மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடும்படி அரிகிருஷ்ணனையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரேம்குமார் கண்டித்தார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆத்திரம் அடைந்த அரிகிருஷ்ணன், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் பிரேம்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்கு சன்பிரியாவும் சம்மதம் தெரிவித்தார். இதற்காக அரிகிருஷ்ணன், செல்போன் செயலி மூலம் பழைய காரை வாங்கினார்.

சம்பவத்தன்று நண்பர் ஒருவரை தன்னுடன் காரில் அழைத்துக்கொண்டு வில்லிவாக்கம் சென்ற அவர், கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்ற பிரேம்குமார் மீது காரை ஏற்றிக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

ஆனால் அது விபத்து என நம்ப வைப்பதற்காக ஆள் நடமாட்டம் இல்லாத மற்றும் கண்காணிப்பு கேமரா இல்லாத இடமாக பார்த்து அந்த இடத்தில் பிரேம்குமார் மீது காரை ஏற்றி உள்ளனர். இதனால் முதலில் அடையாளம் தெரியாத கார் மோதி பிரேம்குமார் இறந்துவிட்டதாக கருதிய போலீசார் விபத்து என வழக்குபதிவு செய்திருந்தனர்.

விசாரணையில் உண்மை வெளிவந்ததையடுத்து கொலை வழக்காக மாற்றிய போலீசார், இந்த வழக்கை அயனாவரம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றினர். இந்த வழக்கு தொடர்பாக சன்பிரியா, அரிகிருஷணன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அரிகிருஷ்ணனின் நண்பரை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story