சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்காவில் காய்கறி, பழ வடிவில் இருக்கைகள் அமைப்பு
ஊட்டி தாவரவியல் பூங்காவில் காய்கறி, பழ வடிவில் தத்ரூபமாக இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளது.
ஊட்டி
ஊட்டி தாவரவியல் பூங்காவில் காய்கறி, பழ வடிவில் தத்ரூபமாக இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளது.
தாவரவியல் பூங்கா
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது. அப்போது கண்காட்சிகள், சிறப்பு மலர் அலங்காரங்கள் இடம்பெறுவது வழக்கம். இதனால் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு வருபவர்கள் பெரும்பாலும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள். அங்கு பழமையான மரங்கள், கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, இலை பூங்கா, பெரிய புல்வெளி மைதானம், மலர் மாடம், அலங்கார வேலிகள் போன்ற இடங்களில் பல வண்ண மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்கும் வகையில் நிழற்குடைகள் உள்ளன. காட்சி மாடத்தில் நின்றபடி பூங்காவின் இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம்.
காய்கறி வடிவில் இருக்கைகள்
இந்தநிலையில் இந்த ஆண்டு கோடை சீசனுக்கு முன்பாக சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சுற்றுலா பயணிகள் அமர்ந்து செல்பி எடுக்கும் வகையில் ஆப்பிள், பப்பாளி, தர்பூசணி, கேரட், பாகற்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறி, பழ வடிவங்களில் இருக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. தற்போது அந்த பணிகள் முடிந்து இருக்கைகள் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்து உள்ளது.
கண்ணை கவரும் வகையில் பழங்கள், காய்கறிகள் வடிவில் தத்ரூபமாக இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பழ, காய்கறிகளை வெட்டி வைத்து இருப்பது போல் காட்சி அளிக்கிறது. அதில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் பூங்காவின் இயற்கை அழகை ரசித்து வருகின்றனர். தாவரவியல் பூங்காவில் அமைக்கப்பட்ட புதிய இருக்கைகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது.