திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் சீமான் ஆலோசனை
திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் சீமான் ஆலோசனை நடத்தினர்.
பூந்தமல்லி,
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மாவட்ட கட்டமைப்பை வலிமைப்படுத்துவதற்காக மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 3-ம் கட்ட பயண திட்டமாக திருவள்ளூர் மாவட்டத்துக்கு செல்ல உள்ளார்.
இதற்காக திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட திருவள்ளூர், திருத்தணி, மதுரவாயல், பூந்தமல்லி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடான கலந்தாய்வு கூட்டம் பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
அதன்பிறகு நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-
இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு விலைவாசி மேலும் உயரும். விலை பொருட்களை உற்பத்தி செய்யும் வேளாண் துறையில் அரசின் எந்த திட்டமும் இல்லை. உலகிற்கு வேளாண் எப்படி செய்ய வேண்டும் என கற்று கொடுத்த இனம், இன்று வேளாண் பொருட்களை இறக்குமதி செய்வது கேவலம். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறையும். ஏனென்றால் நாமே விவசாயம் செய்வோம். அங்காடிகள் வைத்து ஒரே விலையில் நாங்களே அதனை வினியோகம் செய்வோம்,
இவ்வாறு அவர் கூறினார்.