விபத்தில் தொழிலாளி சாவு:வாகனம் பறிமுதல்; டிரைவர் கைது
முத்துப்பேட்டை அருகே விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பான வழக்கில் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு டிரைவர் கைது செய்யப்பட்டார்.
முத்துப்பேட்டை அருகே விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பான வழக்கில் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு டிரைவர் கைது செய்யப்பட்டார்.
அடையாளம் தெரியாத வாகனம்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை சுந்தரம் பகுதியை சேர்ந்தவர் சிவா என்கிற சத்தியமூர்த்தி (வயது56). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செம்படவன்காடு ரவுண்டானா அருகே உள்ள கடைக்கு சென்று டீ குடித்தார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
செம்படவன்காடு கோவில் ஆர்ச் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
பறிமுதல்- கைது
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் திருமுருகன், ஆனந்தன் ஆகியோர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.
இதில் விபத்தை ஏற்படுத்தியது சரக்கு வேன் என்பது தெரியவந்தது. அந்த வாகனத்தை நேற்று போலீசார் பறிமுதல் செய்ததுடன், அதனை ஓட்டிவந்த முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு பாரக்குளம் தெரு பகுதியை சேர்ந்த செந்தில் (38) என்பவரை கைது செய்தனர்.