தமிழ்நாட்டின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு ஆய்வு; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்


தமிழ்நாட்டின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு ஆய்வு; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்
x

தமிழ்நாட்டின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு அடிப்படை ஆய்வுக்கு முந்தைய ஆய்வின் சுருக்க அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

வளர்ச்சி குறியீடுகள்

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு, தமிழகத்தில் உள்ள குடும்பங்களின் சமூக-பொருளாதார நிலையில் ஏற்படும் மாற்றத்தை ஆய்வு செய்வதற்காக, மாநிலத்தில் உள்ள குடும்பங்களில் சிலவற்றை மாதிரியாக கொண்டு குறிப்பிட்ட இடைவெளிகளில் எடுக்கப்படுவதாகும். அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளால் தமிழகத்தில் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகம் ஆகியவை எவ்வாறு மாற்றம் பெறுகின்றன என்பதை இந்த கணக்கெடுப்பு பகுப்பாய்வு செய்கிறது.

சமூக-பொருளாதார மாற்றங்களை புரிந்துகொண்டு அதற்கேற்ப கொள்கை முடிவு எடுக்க இது பயனுள்ளதாக அமையும்.

வலுவான தரவுகள்

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனமானது, மாநிலத்தின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உள்ள கணக்கெடுப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுடன் இணைந்து, தமிழ்நாட்டின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு அடிப் படை ஆய்வுக்கு முந்தைய ஆய்வை மேற்கொண்டது.

களப்பணியாளர்கள் மூலமாக குடும்பங்களிடம் இருந்து மக்கள்தொகை மற்றும் சமூக-பொருளாதார தரவுகள் சேகரிக்கப்பட்டன. 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் தாமதத்தை கருத்தில்கொண்டு, மாநிலத்தின் சமீபத்திய மக்கள்தொகை அம்சங்களையும் மதிப்பிடுவதற்கான வாய்ப்பை இந்த ஆய்வின் தரவுகள் வழங்குகின்றன.

தமிழ்நாட்டின் அந்த முந்தைய ஆய்வு, மாநிலம் எவ்வாறு வளர்ச்சியடைந்து வருகிறது என்பதற்கு முன்னோடியாக, 2018-19-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது. அது, 2 லட்சத்து 12 ஆயிரத்து 282 குடும்பங்களில் இருந்து, பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தின் ஒரு வலுவானதரவுத்தளத்தை வழங்குகிறது.

மக்கள்தொகை மற்றும் சமூக-பொருளாதார குறியீடுகளான கல்வி, வேலைவாய்ப்பு, விவசாய நிலம் மற்றும் சொத்து உரிமை, ரேஷன் அட்டை உரிமை, குடும்ப வருமானம் மற்றும் சுகாதாரம், மின்சாரம், தண்ணீர், சமையல் எரிபொருள் மற்றும் வீட்டுவசதி போன்ற அடிப்படை கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீதான ஆய்வுகளை அடிப்படை ஆய்வுக்கு முந்தைய ஆய்வு உள்ளடக்கியது.

வெளியிட்டார்

தமிழ்நாட்டின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு அடிப்படை ஆய்வுக்கு முந்தைய ஆய்வின் (2018-19) சுருக்க அறிக்கையை சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலாளர் வெ.இறையன்புவிடம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 11-ந்தேதி (நேற்று) வழங்கினார்.

இந்த சுருக்க அறிக்கையும், அதுதொடர்பான கொள்கை சுருக்க ஏடுகளும், அடிப்படை ஆய்வுக்கு முந்தைய ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகளை முன்னிலைப்படுத்தி பல்வேறு சமூக-பொருளாதார குறியீடுகளின் விரிவான கண்ணோட்டத்தையும் வழங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story