1,400 பண்ணை குட்டைகள் அமைத்து உலக சாதனை படைப்போம்


1,400 பண்ணை குட்டைகள் அமைத்து உலக சாதனை படைப்போம்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,400 பண்ணை குட்டைகள் அமைத்து உலக சாதனை படைப்போம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

திருப்பத்தூர்

கலெக்டர் ஆய்வு

கந்திலி ஊராட்சி ஒன்றியம் விசமங்கலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் 3 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

1,400 பண்ணை குட்டை

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் சின்னாரம்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 1,400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கிவைத்தார். திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,400 பண்ணை குட்டை என்பது 6 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 208 ஊராட்சிகளில், 700 சமுதாய பண்ணை குட்டையாகவும், 700 தனி நபர் பண்ணை குட்டையாகவும் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது.

ஒரு பண்ணை குட்டைக்கு ரூ.2 லட்சம் வீதம் அரசாங்கம் அளிக்கிறது. அதன்படி 1,400 பண்ணை குட்டைகளுக்கு ரூ.28 கோடி ஆகும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக தமிழ்நாடு அரசின் மூலமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உலக சாதனை

மேலும் பண்ணை குட்டையின் அளவு 78 அடி நீளம், 36 அடி அகலம் மற்றும் 6 அடி ஆழம் கொண்டதாகும். 1,400 பண்ணை குட்டைகளை வெட்டுவதன் மூலமாக விவசாயிகளும், பொதுமக்களும் பயன் பெறுவார்கள். மேலும் விவசாயிகள் மீன் வளர்க்கவும் பயன்படுத்திகொள்ளலாம். நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நிலத்தடி நீர் மட்டம், கிணறுகளின் நீர் மட்டம் உயரும்.

மாவட்டத்தை தண்ணீர் நிறைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1,400 பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டால் மாவட்டத்தில் முதல் முறையாக புதிய உலக சாதனை படைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர் பானு, எலைட் வேர்ல்டு ரெக்கார்டு பாவனாநவநீத், தாசில்தார் சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விநாயகம், நேரு, ஒன்றிய பொறியாளர் சரவணன் ஆ௳ியோர் உடனிருந்தனர்.

முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் அழகிரி வரவேற்றார் முடிவில் ஒன்றிய கவுன்சிலர் ஹேமலதா வினோத் நன்றி கூறினார்.


Next Story