சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

ஈரோடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கட்டிட தொழிலாளி

பவானி அருகே உள்ள கேசரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பூபதி என்கிற பிரகாஷ் (வயது 36). கட்டிட தொழிலாளி. திருமணம் ஆகி, ஒரு மாதத்திலேயே இவருடைய மனைவி பிரிந்து சென்று விட்டார். மேலும் பூபதி கட்டிட வேலை இல்லாத நேரத்தில் மீன் பிடித்து அதனை விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 2-ந்தேதி அந்த பகுதியில் மீன் பிடிப்பதற்காக மண் புழுக்களை பூபதி எடுத்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 7 வயது சிறுமியிடம் இவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். இதனால் அந்த சிறுமி கூச்சலிட்டு உள்ளார். இதையடுத்து பூபதி அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி இதுபற்றி தனது தாயிடம் கூறினார். இதைத்தொடர்ந்து அந்த சிறுமியின் தாய் இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

5 ஆண்டு சிறை

உடனே கட்டுப்பாட்டு அறை போலீசார் இதுபற்றி பவானி மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு மகளிர் போலீசார் சென்று விசாரணை நடத்தி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூபதியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், 'சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட பூபதிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து,' தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.


Next Story