சென்னை சிறுமிக்கு பாலியல் தொல்லை: 8 பேருக்கு ஆயுள் தண்டனை -போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


சென்னை சிறுமிக்கு பாலியல் தொல்லை: 8 பேருக்கு ஆயுள் தண்டனை -போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
x

சென்னை சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளான வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 13 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சென்னை,

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமி அவரது நெருங்கிய உறவினரின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

அவ்வப்போது அந்தசிறுமியை அவரது பெற்றோர் உறவினர் வீட்டுக்கு சென்று பார்த்து வந்தனர்.

முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து

இந்த நிலையில் அந்த சிறுமியை பராமரித்து வந்த உறவினர் பணத்துக்கு ஆசைப்பட்டு சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தொடங்கினார். சிறுமியின் உறவினர் பணத்துக்கு அடிமையாகி புரோக்கராக மாறி அந்த சிறுமியை முக்கிய பிரமுகர்களுக்கு விருந்தாக்கினார்.

அவ்வப்போது முக்கிய பிரமுகர்கள் சிறுமியை அழைத்து செல்வதும், உல்லாசம் அனுபவித்துவிட்டு சிறுமியை உறவினரின் வீட்டில் விட்டுச்செல்வதும் வாடிக்கையாக இருந்து வந்தது.

கதறி அழுதார்

இதனை தனது பெற்றோரிடம் தெரிவித்தால் உறவினர்களால் தனக்கும், தனது பெற்றோருக்கும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என கருதிய சிறுமி இதுபற்றி தனது பெற்றோரிடம் சொல்ல முடியாமல் தவித்து வந்தார்.

பூக்களை மொய்க்கும் தேனீக்கள் போல பலர் சிறுமியை மொய்க்க தொடங்கியதால் சிறுமி மனதளவில் மிகுந்த நெருக்கடிக்கு ஆளானார்.

இதன் காரணமாக தனக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்ட அவளது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

அடையாளம் காட்டினார்

பராமரிப்புக்காக உறவினரிடம் விட்டுச்சென்ற மகளை உறவினர்களே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சீரழித்தது அவர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.

உடனே சிறுமி சீரழிக்கப்பட்டது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்து சிறுமி மற்றும் அவளது உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சிறுமி, தன்னை சீரழித்தவர்கள் சிலரை அடையாளம் காட்டினார். சிறுமியை சீரழித்த கும்பலை சேர்ந்தவர்களில் சிலர் தங்களை யார் என்று காட்டிக்கொண்டு அந்த சிறுமிக்கு பாதுகாவலராக இருப்பது போன்று நடந்து கொண்டு இந்த கொடுமையான செயலிலும் ஈடுபட்டு உள்ளனர்.

இன்ஸ்பெக்டர்-பா.ஜ.க. பிரமுகர்

இந்த படுபாதக செயலை எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த புகழேந்தி (வயது 44), வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையைச் சேர்ந்த தொழில் அதிபரும், பா.ஜ.க. பிரமுகருமான ராஜேந்திரன், உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி கண்ணன் (53) உள்ளிட்ட சிலரும் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உறவினர்களும் போலீசாரின் பிடியில் சிக்கி விடாமல் இருக்க தங்களுக்கு போலீஸ் மற்றும் அரசியல்வாதியின் உதவி வேண்டும் என்று கருதி இன்ஸ்பெக்டரையும், பா.ஜ.க. பிரமுகரையும் தங்களது வாடிக்கையாளராக வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது.

போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இருந்து இன்ஸ்பெக்டர் புகழேந்தி தப்பிக்க முயன்றபோதும், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உறவினர்களின் வாக்குமூலம் போன்றவை இன்ஸ்பெக்டரை வழக்கில் சிக்கவைத்தது.

21 பேர் கைது

இதேபோன்று, சிறுமியை சீரழித்த மற்றவர்களும் ஒருவர்பின் ஒருவராக போலீசாரின் பிடியில் சிக்கினர். இதைத்தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் 8 பேர், இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பா.ஜ.க. பிரமுகர் ராஜேந்திரன், உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி கண்ணன் என மொத்தம் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமி பாலியல் வழக்கில் சிக்கிய இன்ஸ்பெக்டர் புகழேந்தி அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம், சாட்சியங்களின் வாக்குமூலம் என 600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி கடந்த 5.2.2021 அன்று தாக்கல் செய்தார்.

96 பேர் சாட்சியம்

இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் கடந்த 16.2.2021 முதல் தொடங்கி தொடர்ச்சியாக நடந்து வந்தது. இந்த வழக்கில் மொத்தம் 96 பேர் சாட்சியம் அளித்தனர். போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் டி.ஜி.கவிதா ஆஜராகி வாதாடினார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த 15-ந் தேதி இன்ஸ்பெக்டர் புகழேந்தி உள்பட 21 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.

இவர்களுக்கான தண்டனை 26-ந் தேதி (நேற்று) அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று இந்த வழக்கு நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் பட்டியலிடப்பட்டது.

ஆயுள் தண்டனை

இதனையடுத்து குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 21 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 10.30 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மதியம் 12.30 மணிக்கு நீதிபதி தண்டனை விவரத்தை அறிவிக்க தொடங்கினார்.

அதன்படி, சிறுமியின் உறவினர்கள் 8 பேருக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையிலான ஆயுள் தண்டனையும், தலா ரூ.17 ஆயிரம் அபராதமும், இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பா.ஜ.க. பிரமுகர் ராஜேந்திரன், உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி கண்ணன், காமேஸ்வரராவ் (33), முகமது அசாருதீன் (33), பசுலுதீன் (32), வினோபாஜி (39), கிரிதரன் (36), ராஜசுந்தரம் (62), நாகராஜ் (30), பொன்ராஜ் (35), வெங்கட்ராம் என்ற அஜய் (25), அனிதா என்ற கஸ்தூரி (36) ஆகிய 13 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இன்ஸ்பெக்டர் புகழேந்திக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும், உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி கண்ணன் மற்றும் ராஜாசுந்தர் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சமும், பா.ஜ.க. பிரமுகர் ராஜேந்திரன், வினோபாஜி, கிரிதரன், காமேஸ்வரராவ் ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் அதிகபட்ச அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 7 லட்சத்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாழ்நாள் முழுவதும் சிறை

இன்ஸ்பெக்டர் புகழேந்தியை பொறுத்தமட்டில் அவருக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 20 ஆண்டும், மைனர் என தெரிந்தும் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்திய குற்றத்துக்காக 7 ஆண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் உறவினர்கள் 8 பேருக்கும் 5 சட்டப்பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டப்பிரிவிலும் ஆயுள் தண்டனை, வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையிலான ஆயுள் தண்டனை, தலா 10 ஆண்டு, 7 ஆண்டு, 2 ஆண்டு என தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

கருணை காட்டக்கூடாது

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையான 7 லட்சத்து ஆயிரம் ரூபாயும், இழப்பீடாக தமிழக அரசு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, 'சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சீரழிப்பவர்களுக்கு கருணை காட்டக்கூடாது.

சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கும் கும்பலுக்கு சிறுமிகள் இரையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என தீர்ப்பில் கூறி உள்ளார்.


Next Story