திருச்சியில் 12 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் சிவாஜி சிலை


திருச்சியில் 12 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் சிவாஜி சிலை
x

திருச்சியில் 12 ஆண்டுகளாக சிவாஜி சிலை மூடிக்கிடக்கிறது.

திருச்சி

சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன் 1928-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி விழுப்புரத்தில் பிறந்தார். திரையுலகில் வி.சி.கணேசனாக, அதாவது விழுப்புரம் சின்னய்யா கணேசனாக அறிமுகமாகி, பின்னர் சத்ரபதி சிவாஜி நாடகத்தில் நடித்ததால், 'சிவாஜி கணேசன்' என அழைக்கப்பட்டார்.

முதலில் அவர் திருச்சியில் உள்ள நாடகக்குழுவில் நடிக்க தொடங்கினார். அப்போது, கருணாநிதி, சிவாஜி, அன்பில் தர்மலிங்கம் எல்லாம் திருச்சியில் ஒன்றாக வளர்ந்தவர்கள். பின்னர் திரைத்துறையில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். சிவாஜி நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் செவாலியே உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றவர்.

திருச்சியில் வெண்கல சிலை

சிவாஜி 2001-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி காலமானார். திருச்சியில் அவரது சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் கடந்த தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்டது. 2011-ம் ஆண்டு திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் சிவாஜிக்கு 9 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டது.

சிலை திறப்பதற்கு முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அந்த சிலை துணியை கொண்டு மூடப்பட்டது. 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி முடிந்து தற்போது மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2½ ஆண்டுகளை கடந்து விட்டது. ஆனால் அந்த சிலை இன்னும் திறக்கப்படவில்லை.

திறக்க கோரிக்கை

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடிகர் சிவாஜிக்கு பிறந்தநாள் ஆகும். இன்றாவது சிவாஜி சிலையை திறக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சிவாஜி கணேசனின் ரசிகரும் திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர்கள் நற்பணி சங்க தலைவருமான அண்ணாதுரை கூறுகையில்:- "திருச்சியில் சிவாஜி சிலை நிறுவப்பட்டு 12 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் இருப்பது வேதனையாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தி உள்ளோம். ஆனாலும் இதற்கு இன்றளவும் விடை தெரியவில்லை. குறிப்பாக சிவாஜி சிலையை திறக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட அமைச்சர்களிடம் பேசி வருகிறோம். ஆனாலும் சிலையை திறக்க முடியவில்லை. கடந்த 12 ஆண்டுகளில் அவருடைய நினைவுநாள், பிறந்தநாள் அன்று அவருடைய சிலைக்கு மரியாதை செலுத்த முடியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. விரைவில் சிவாஜி கணேசன் சிலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


Next Story