கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு


கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 10 Feb 2023 7:45 PM GMT (Updated: 10 Feb 2023 7:45 PM GMT)
சேலம்

ஓமலூர்:-

ஓமலூர் அருகே கடையின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பூட்டு உடைப்பு

ஓமலூர் அருகே பள்ளப்பட்டி பகுதி சேர்ந்தவர் சண்முகம் (வயது 52). இவர் அந்த பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் டிபார்ட்மெண்ட் ஸ்டோரை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் அதே பகுதியில் அவரது திருமண மண்டபம் பணி நடைபெறுவதால் மண்டபத்தில் இரவில் வேலை செய்து வரும் பணியாளர்களுக்கு டீ வாங்குவதற்காக இரவு 1:30 மணி அளவில் டீ கடைக்கு சென்று உள்ளார். அப்போது டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சட்டர் பூட்டு உடைக்கப்பட்டு சட்டர் பாதி திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

திருட்டு

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த கணினி ஹார்ட் டிஸ்க், கணினி மானிட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம், ½ பவுன் தங்க மோதிரம் மற்றும் மளிகை பொருட்கள், டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஒரு பகுதியில் உள்ள துணிக்கடையில் இருந்த ஜவுளிகள் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசில் சண்முகம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

காரில் வந்த கும்பல்

மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஒரு காரில் 4 பேர் வருவதும், அவர்களில் 2 பேர் கடைக்குள் புகுந்து பொருட்களை திருடுவதும், 2 பேர் காரில் காத்திருப்பதும் காட்சி பதிவாகி இருந்தது.

தொடர்ந்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரில் வந்து கைவரிசை காட்டிய 4 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story