தேவிகுளம் உள்பட 3 தாலுகாவை தமிழகத்துடன் இணைக்ககோரி கையெழுத்து இயக்கம்


தேவிகுளம் உள்பட 3 தாலுகாவை தமிழகத்துடன் இணைக்ககோரி கையெழுத்து இயக்கம்
x

தேவிகுளம் உள்ளிட்ட 3 தாலுகாவை தமிழகத்துடன் இணைக்கக்கோரி தேனி மாவட்டத்தில் கையெழுத்து இயக்கம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

தேனி

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்டம் 142 அடி வரை தேக்கப்பட்டு வருகிறது. 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்த தேவையான பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரள வனத்துறை தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை ஆகிய தாலுகாக்களை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்த தமிழக விவசாயிகளில் ஒருதரப்பினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த கையெழுத்து இயக்கத்துக்கு அனுமதிகேட்டு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில் நிர்வாகிகள் சிலர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தத்திடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

பின்னர் இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், தேவிகுளம் உள்ளிட்ட 3 தாலுகாவை தமிழகத்துடன் இணைக்க வலியுறுத்தி வருகிற 24-ந்தேதி கையெழுத்து இயக்க தொடங்க உள்ளோம். குமுளி முதல் தேனி வரை முதற்கட்டமாக கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம்" என்றார்.


Next Story