அண்ணன்-தம்பியிடம் ரூ.2½ லட்சம் வெள்ளிப்பொருட்கள் பறிமுதல்
அண்ணன்-தம்பியிடம் ரூ.2½ லட்சம் வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர் தர்சிப் முகமது நிவாஷ்(வயது 24). இவர் நேற்று திருச்சியில் இருந்து தனது தம்பி அகமது சகின் முகமது நியாசுடன்(23) திருச்செந்தூருக்கு செல்வதற்காக ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அங்கு அவர்களது உடைமைகளை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த பையில் ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்து 184 மதிப்பிலான 3 ஆயிரத்து 793 கிலோ வெள்ளிப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி அவா்களிடம் போலீசார் விசாரித்தபோது, அதற்குரிய ரசீது, ஆவணம் எதுவும் அவர்களிடம் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து கொலுசுகள் உள்ளிட்ட வெள்ளிப்பொருட்கள் இருந்த பையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது பற்றி தகவல் அறிந்த விற்பனை வரி அதிகாரிகள் கொண்ட குழுவினர் அங்கு வந்து வெள்ளிப்பொருட்களை பரிசோதித்தனர். மேலும் ஆவணம் இல்லாமல் கொண்டு வந்ததால் வெள்ளிப்பொருட்களுக்கு ரூ.15 ஆயிரத்து 252 அபராதம் விதித்தனர். அந்த அபராதத்தை செலுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் வெள்ளிப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.