பழனி முருகன் கோவிலில் பள்ளியறை சன்னதியில் ரூ.35 லட்சத்தில் வெள்ளித்தகடு பொருத்தும் பணி
பழனி முருகன் கோவிலில் பள்ளியறை சன்னதியில் ரூ.35 லட்சத்தில் வெள்ளித்தகடு பொருத்தும் பணி தீவிரம் நடைபெற்று வருகிறது.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கோபுரங்கள், சிற்பங்கள், மண்டபங்கள், சுவாமி வாகனங்கள் உள்ளிட்ட திருப்பணிகள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றன. இதற்கிடையே பழனி முருகன் கோவிலின் பல்வேறு திருப்பணிகளுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் இன்றளவும் ஏராளமானோர் நன்கொடை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் பழனி முருகன் கோவில் மூலவர் சன்னதிக்கு செல்லும் வழியில் உட்பிரகாரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு உற்சவர் மண்டபம், நடராஜர், சின்னக்குமார சுவாமிக்கு என தனித்தனி மண்டபம் உள்ளது. இதில், பள்ளியறை மண்டபம் முழுவதும் நன்கொடையாளர் மூலம் ரூ.35 லட்சம் செலவில் வெள்ளி முலாம் பூசிய தகடு பொருத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் அற்புத வேலைப்பாடுகளுடன் மொத்தம் 54 கிலோ வெள்ளியால் ஆன தகடு பொருத்தும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.