சிறுவாணி அணையின் நீர்மட்டம் 12 அடியாக உயர்வு
நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்து உள்ளது.
கோவை
நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்து உள்ளது.
சிறுவாணி அணை
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காட்டில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 45 அடி வரையே தண்ணீரை தேக்கி வைக்க கேரள அரசு அனுமதித்து வருகிறது.
கோவை மாநகரில் 26 வார்டுகள், 20-க்கும் மேற்பட்ட கிராமங்க ளுக்கு குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. அதில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் (100 எம்.எல்.டி) தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கும் கீழ் குறைந்தது. கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் ஒரு அடிக்கும் குறைவாக சென்றது. இதனால் தண்ணீர் எடுக்கும் அளவு 3 கோடி லிட்டராக குறைந்தது.
12 அடியாக உயர்வு
இந்த நிலையில் ஜூன் மாத இறுதியில் இருந்து நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அணைக்கு செல்லும் முத்தியாறு, பட்டியலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சிறு வாணி அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர தொடங்கியது. நேற்றைய நிலவரப்படி சிறுவாணி அணையின் நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்தது.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இதனால் அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 3 கோடியில் இருந்து 7 கோடி லிட்டராக (70 எம்.எல்.டி.) அதிகரிக்கப்பட்டு உள்ளது.
நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்து உள்ளதால் சிறுவாணி அணையின் நீரேற்று நிலையத்தில் உள்ள 3-வது வால்வு மூழ்கி உள்ளது. செப்டம்பர் மாதம் வரை பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்றனர்.