மதபோதகர் குறித்து அவதூறு வீடியோ: சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது


மதபோதகர் குறித்து அவதூறு வீடியோ: சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது
x

சமூக வலைத்தளத்தில் மதபோதகர் குறித்து அவதூறு வீடியோ பரப்பிய வழக்கில் சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பா.ஜ.க.வினர் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

சினிமா சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளருமான கனல் கண்ணன் சமீபத்தில் டுவிட்டர் பதிவில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார். அதில், மத போதகர் அணியும் உடையுடன் வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர், இளம் பெண்ணுடன் நடனமாடும் வீடியோவும், அதன் பின்னணியில் தமிழ் திரைப்பட பாடலும் இணைக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் அதில் வெளிநாட்டு மத கலாசாரம் இது தான் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை பார்த்த குமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஆஸ்டின் பெனட் (54) என்பவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதன் பேரில் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்து முன்னணி போராட்டம்

இந்தநிலையில் நேற்று காலை 10 மணிக்கு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு கனல் கண்ணன் ஆஜரானார். ஆனால் அங்கு விசாரணை தாமதமானது.

இதனை தொடர்ந்து அவருக்கு மதிய உணவு வழங்கவில்லை எனவும், விசாரணையை போலீசார் அதிக நேரமாக இழுத்தடிப்பதாக கூறி இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து திடீரென அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கனல் கண்ணன் கைது

இந்த பரபரப்புக்கு இடையே மாலை 6 மணி வரை கனல் கண்ணனிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணை முடிவடைந்ததும் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கனல் கண்ணனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் நாகர்கோவிலில் உள்ள 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

சட்டரீதியாக சந்திப்பேன்

இந்த வழக்கு தொடர்பாக கனல் கண்ணன் கூறுகையில், "எனது டுவிட்டர் கணக்கில் நான் பதிவிட்ட வீடியோ எங்கிருந்து வந்தது என்பதற்கான ஆவணங்களை போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளேன். ஆனால் போலீசார் முறையான விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்தினர். மேலும் இந்த வழக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களையும் போலீசாரிடம் வழங்கியுள்ளேன். இது தொடர்பாக எந்த பிரச்சினை வந்தாலும் அதனை சட்டரீதியாக சந்திப்பேன்" என்றார்.


Next Story