நோய் தாக்கத்தால் விளைச்சல் பாதிப்பு:உழவர் சந்தைகளில் சின்ன வெங்காயம் விலை உயர்வுஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை
தர்மபுரி
நோய் தாக்கம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் தர்மபுரி உழவர் சந்தைக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்ததால் அதன் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனையானது.
சின்ன வெங்காயம் சாகுபடி
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கோடை வெயில் காலம் முடிந்த பின்பும் தொடர்ந்து வெயிலின் தாக்கம் மற்றும் பருவமழை காரணமாக கடந்த ஒரு மாதமாக சின்ன வெங்காயத்தின் உற்பத்தி வழக்கத்தை விட குறைந்தது.
இதனால் சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. கடந்த வாரம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில் அதன் வரத்து தொடர்ந்து குறையத்தொடங்கியது. இதன் காரணமாக சின்ன வெங்காயம் விலை உயர்ந்தது.
விலை உயர்வு
இந்தநிலையில் சின்ன வெங்காய பயிரில் அழுகல் நோய் தாக்குதல் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டது. மேலும் கர்நாடக மாநிலத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் அறுவடை பணி தாமதமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று முன்தினம் தர்மபுரி உழவர் சந்தையில் சின்னவெங்காயம் 1 கிலோ ரூ.102-க்கு விற்பனையானது. விளைச்சல் பாதிப்பு மற்றும் வரத்து குறைந்ததால் சின்னவெங்காயம் விலை உயர்ந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.18 அதிகரித்தது. இதனால் 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பொதுமக்கள் அதிர்ச்சி
தர்மபுரி மாவட்டத்தில் வெளிமார்க்கெட்டுகளில் 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.140 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் சமையலுக்காக சின்ன வெங்காயத்தை வாங்கும் அளவை குறைத்து வருகிறார்கள். சின்ன வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து வியாபாரிகள், விவசாயிகள் கூறுகையில், தொடர் மழையால் நோய் தாக்குதல் ஏற்பட்டு சின்னவெங்காயம் சாகுபடி பாதித்துள்ளது. இதனால் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளுக்கு வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக சின்னவெங்காயம் விலை உயர்ந்துள்ளது என்று தெரிவித்தனர்.