உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 12 கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று சில தீர்மானங்கள் ஒத்திவைக்கப்பட்டது; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு மறைமலைநகர் நகராட்சி ஆணையாளர் கடிதம்


உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 12 கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று சில தீர்மானங்கள் ஒத்திவைக்கப்பட்டது; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு மறைமலைநகர் நகராட்சி ஆணையாளர் கடிதம்
x

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 12 கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று சில தீர்மானங்கள் ஒத்திவைக்கப்பட்டது என்று கலெக்டருக்கு நகராட்சி ஆணையாளர் கடிதம் அனுப்பி உள்ளார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியின் நகரமன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள மன்ற கூட்ட அரங்கத்தில் நேற்று முன்தினம் மாலை நகர மன்ற தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் சவுந்தரராஜன், தி.மு.க. நகர மன்ற துணைத்தலைவர் சித்ரா கமலக்கண்ணன், அ.தி.மு.க., தி.மு.க., ஐ.ஜே.கே. கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியவுடன் தி.மு.க. நகர மன்ற துணைத்தலைவர் மற்றும் அ.தி.மு.க, தி.மு.க., ஐ.ஜே.கே., சுயேச்சை உள்பட 12 கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட சில தீர்மானங்களை ஒத்திவைக்க கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீர்மானங்கள் ஒத்திவைப்பு

இதை தொடர்ந்து செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 12 கவுன்சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

ஆனால் தொடர்ந்து நள்ளிரவு மற்றும் நேற்று காலை 11 மணி வரை 12 கவுன்சிலர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று காலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 12 கவுன்சிலர்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க சென்றனர்.

இந்த நிலையில் மறைமலைநகர் நகராட்சி ஆணையாளர் மன்றத்தில் கொண்டுவரப்பட்ட சில தீர்மானங்கள் ஒத்திவைக்கப்பட்டது என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தின் நகலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 12 கவுன்சிலர்களுக்கு ஆணையாளர் வழங்கினார். இதனைதொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை 12 கவுன்சிலர்களும் கைவிட்டனர்.

நகரமன்ற தலைவர் விளக்கம்

12 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் குறித்து மறைமலைநகர் தி.மு.க. நகர மன்ற தலைவர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:- மறைமலைநகர் நகராட்சியில் சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானம், நகராட்சி பள்ளிக்கூடங்கள் நவீன மயமாக்குதல், சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நடைபெற்று வருகிறது.

காழ்ப்புணர்ச்சி ஏற்பட்ட அ.தி.மு.க. கவுன்சிலர்களுடன் சில தி.மு.க. கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து வளர்ச்சி பணியை நகராட்சியில் முடக்குவதற்கு முயற்சி செய்கின்றனர். இதன் காரணமாக மன்ற கூட்டங்கள் நடைபெறும் போது தேவையில்லாத சில பிரச்சினைகளை எழுப்பி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story