மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள் தொடங்கியது


மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள் தொடங்கியது
x
தினத்தந்தி 28 Nov 2022 6:56 PM GMT (Updated: 28 Nov 2022 7:09 PM GMT)

கரூர் மாவட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள் தொடங்கியது.

கரூர்

ஆதார் எண் இணைப்பது கட்டாயம்

தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. விவசாயம், கைத்தறி, விசைத்தறி போன்ற தொழில் துறைகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து துறை பயனர்களும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முயன்றனர். ஆனால் சரியான வழிகாட்டுதல் இல்லாததால், ஆதார் எண்ணை பலரால் இணைக்க முடியவில்லை. பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில் நேற்று முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதி வரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சசர் வி.செந்தில் பாலாஜி அறிவித்தார்.

சிறப்பு முகாம்கள் தொடக்கம்

அதன்படி, தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் நேற்று முதல் சிறப்பு முகாம்கள் தொடங்கின. கரூர் மாவட்டத்தில் 50 மின்வாரிய பிரிவு அலுவலக மையங்களில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பொதுமக்கள் தங்களது மின் நுகர்வோர் அட்டை மற்றும் ஆதார் அட்டையை நேரடியாக கொண்டு சென்று இணைத்துக் கொள்ளலாம்.அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து ஞாயிற்றுக்கிழமை உள்பட காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நேரடியாக மின் வாரிய அலுவலகங்களுக்கு சென்று ஆதார் எண்ணை இணைக்கலாம். அல்லது வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாகவும் இணைத்துக்கொள்ளலாம். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மின் இணைப்பு எண்- ஆதார் எண் இணைத்துக் கொள்ளலாம்.


Next Story