240 இடங்களில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம்


240 இடங்களில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:47 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் 240 இடங்களில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது என கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்தார்.

சிவகங்கை

சுகாதார விழிப்புணர்வு முகாம்

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அழகிச்சிப்பட்டி, சோணைபட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது:-கால்நடைகளின் நலன் காக்கின்ற வகையிலும், வருமுன் காப்போம் என்ற உயரிய நோக்கிலும் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம், மாவட்டத்திலுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 240 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் தொடக்கமாக, சோணைப்பட்டி கிராமத்தில் இந்த முகாமானது நடைபெறுகிறது. மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமானது நடைபெறவுள்ளது.

இலவச சிகிச்சை

கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு மருத்துவ வசதிகளை பெற, பற்றாக்குறையாக உள்ள தொலைதூர கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அக்கிராமங்களில், கால்நடைக்கான மருத்துவ வசதியினை அளித்திடும் நோக்குடன் இந்த முகாம்கள் அரசால் நடத்தப்படுகிறது. மேலும், இம்முகாம்களின் வாயிலாக நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்கு சிகிச்சைகள், சினை பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கால்நடை நோய் புலனாய்வு பிரிவு குழுவினரால் முகாம் நடைபெறும் இடத்திலேயே, நோயுற்ற கால்நடைகளிடமிருந்து ஆய்வுக்கான மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு துல்லியமான சிகிச்சை வழங்கப்படுகிறது. பல்வேறு வகையான கால்நடைகளை, நோய் வரும் முன் காத்தல் போன்ற நடவடிக்கைகள் குறித்த விளக்க கண்காட்சியும் நடத்தப்பட்டு கால்நடை வளர்ப்போருக்கு அவை தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகளுக்கு பரிசு

நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறந்த கிடாரிக்கன்றுகளை வளர்த்த 3 விவசாயிகளுக்கு பரிசுப்பொருட்களையும், 3 விவசாயிகளுக்கு சிறந்த கால்நடை மேலாண்மைக்கான பரிசு மற்றும் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார். முன்னதாக, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த விளக்க கண்காட்சி மற்றும் கால்நடைக்கான முகாமை கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதில், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மஞ்சுளா பாலசந்தர், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story