சாலையில் நின்று ஒற்றைக்கொம்பன் யானை அட்டகாசம்


சாலையில் நின்று ஒற்றைக்கொம்பன் யானை அட்டகாசம்
x

ஆம்பூர் அருகே சாலையில் நின்று ஒற்றைக்கொம்பன் யானை அட்டகாசம் செய்தது. இதனால் மலைவாழ் மக்கள் அச்சமடைந்தனர்.

திருப்பத்தூர்

ஒற்றைக்கொம்பன் யானை

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலைக்கு யானைகள் கூட்டம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வந்தன. அதில் 2 யானைகள் இறந்துவிட்டன. மேலும் பல யானைகள், தண்டராம்பட்டு வனப்பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்தன. அந்த யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், முதுமலைக்கு கொண்டு சென்றுவிட்டனர்.

இந்த யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை தந்தம் கொண்ட ஆண் யானை, ஜவ்வாது மலையில் தஞ்சமடைந்தது. பொதுமக்களுக்கு பாதிப்பு விளைவிக்காமல், ஒற்றை தந்தத்துடன் கம்பீரமாக சுற்றி வரும் இந்த யானைக்கு பொதுமக்கள் 'ஒற்றைக் கொம்பன்' என பெயர் சூட்டி செல்லமாக அழைக்கின்றனர்.

சாலையில் நின்று...

இந்த நிலையில் ஜவ்வாதுமலையில் இருந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு வெளியேறிய ஒற்றைக்கொம்பன் யானை, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சுற்றித்திரிகிறது. ஆம்பூரை அடுத்த நாயக்கநேரிமலை ஊராட்சிக்கு உட்பட்ட பனங்காட்டேரி வனப்பகுதி சாலையில் நின்று நேற்று காலை ஒற்றைக்கொம்பன் யானை அட்டகாசம் செய்தது.

அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களை கடந்து செல்ல விடாமல் பார்வையால் மிரட்டியது. பல மணி நேரமாக சாலையிலேயே நின்று கொண்டிருந்ததால், அந்த வழியாக மலைவாழ் மக்களின் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது. நகராமல் சாலையில் நின்று கொண்டிருந்த யானையுடன், தூரமாக நின்று சிலர் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்துக் கொண்டனர்.

காட்டுக்குள் விரட்டினர்

இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானையின் நடமாட்டத்தால் அந்தப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வயதான காரணத்தால் கண் பார்வை கொஞ்சம் மங்கலாக உள்ள இந்த யானை காட்டுக்குள் செல்லாமல் நடுரோட்டில் நடந்து சென்று சாலையோரம் உள்ள காட்டில் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது.

இதனை வனத்துறையினர் பிடித்து, அதற்கு தேவையான உணவு உள்ளிட்டவற்றை வழங்கி பராமரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story