டாஸ்மாக் கடையில் புகுந்து மதுபாட்டில்கள் திருட்டு


டாஸ்மாக் கடையில் புகுந்து மதுபாட்டில்கள் திருட்டு
x
தினத்தந்தி 8 July 2023 7:30 PM GMT (Updated: 8 July 2023 7:30 PM GMT)

சுல்தான்பேட்டை அருகே டாஸ்மாக் கடையில் புகுந்து மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே டாஸ்மாக் கடையில் புகுந்து மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

டாஸ்மாக் கடை

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே பூராண்டாம்பாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையை நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியம், விற்பனையாளர்கள் வீரன், குணசேகரன் ஆகியோர் பூட்டிவிட்டு வழக்கம்போல் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் அந்த வழியாக மதுக்கடை செயல்படும் இடத்தின் உரிமையாளர் சிதம்பரசாமி நடைபயிற்சி மேற்கொண்டார்.

'ஹார்டு டிஸ்க்' திருட்டு

அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், மதுக்கடை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து கடைக்குள் சென்று பார்த்தபோது, 16 மது பாட்டில்கள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா, ஹார்டு டிஸ்க் ஆகியவையும் மாயமாகி இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சுல்தான்பேட்டை போலீசார் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

மது குடித்தனர்

பின்னர் போலீசார் கூறும்போது, நேற்று முன்தினம் நள்ளிரவில் ஷட்டர் பூட்டை உடைத்து மதுக்கடைக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் மது பாட்டில்கள், கண்காணிப்பு கேமரா, ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை திருடி சென்று உள்ளனர். மேலும் அங்கேயே அமர்ந்து மது அருந்தி உள்ளனர். லாக்கரை உடைக்க முடியாததால், அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் தப்பியுள்ளது என்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story