மதுபான பார்களில் அத்துமீறல்களை தடுக்க வேண்டும்: அரசுக்கு 'டாஸ்மாக்' பணியாளர்கள் சங்கம் கோரிக்கை


மதுபான பார்களில் அத்துமீறல்களை தடுக்க வேண்டும்: அரசுக்கு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
x

கோப்புப்படம்

சகல அதிகாரமும் உள்ள மதுக்கூட ஒப்பந்ததாரர்களை கட்டுப்படுத்திட எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு 'டாஸ்மாக்' பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.) இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கி இருப்பதால் சமூகத்தின் ஒட்டுமொத்த பார்வையும் மதுக்கடைகள் பக்கம் திரும்பி உள்ளது. மதுக்கடைகளின் பணியாளர்களை அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளலாம். ஆனால் அரசியல் அதிகாரம், பணபலம் என சகல அதிகாரமும் உள்ள மதுக்கூட ஒப்பந்ததாரர்களை கட்டுப்படுத்திட எவ்விதமான நடவடிக்கைகளும் இன்றுவரை எடுக்கப்படவில்லை என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

அனைத்து மதுக்கூடங்களையும் கண்காணிக்கும் பொறுப்பை போலீஸ்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் வழங்கிட வேண்டுகிறோம். மதுக்கூடங்களில் (பார்) நடைபெறும் முறைகேடுகளுக்கு 'டாஸ்மாக்' பணியாளர்களை பொறுப்பாக்கி, நடவடிக்கைகள் எடுப்பதை தடுத்து நிறுத்திட உரிய உத்தரவுகளை பிறப்பித்திட வேண்டுகிறோம்.

மதுகூடங்களில் மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டதால் மதுக்கடைகள் 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். 21 ஆண்டுகளாக தின கூலிகளாகவே, எவ்வித கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் பணிபுரியும் 'டாஸ்மாக்' பணியாளர்களிடம் தமிழ்நாடு அரசும், தேர்தல் ஆணையமும், 'டாஸ்மாக்' நிர்வாகமும் மென்மையாக நடந்திட வேண்டுகிறோம்.

மதுக்கூடங்களில் நடைபெறும் சட்ட அத்துமீறல்களை தடுக்க போலீஸ் துறை அதிகாரிகளும், 'டாஸ்மாக்' அதிகாரிகளும் இணைந்து உரிய நடவடிக்கை எடுத்து பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story