நடைபாதையில் மோட்டார் சைக்கிள் மோதி தென்காசி கல்லூரி மாணவர் பலி


நடைபாதையில் மோட்டார் சைக்கிள் மோதி தென்காசி கல்லூரி மாணவர் பலி
x

நண்பரை பார்க்க சென்னை வந்த தென்காசியை சேர்ந்த கல்லூரி மாணவர், நடைபாதையில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலியானார்.

சென்னை

தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் இப்ராகிம் நவ்வுபல் (வயது 21). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சென்னை வடபழனியில் வசித்து வரும் தன்னுடைய சிறுவயது நண்பரான சிவபாரதியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இப்ராகிம் நவ்வுபல் சென்னை வந்தார்.

பின்னர் நண்பரின் அறையில் தங்கினார். இதையடுத்து நண்பர்கள் இருவரும் மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அமைந்தகரைக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை இப்ராகிம் நவ்வுபல் ஓட்டினார். அவருக்கு பின்னால் சிவபாரதி அமர்ந்து இருந்தார்.

அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், சாலையோரம் இருந்த நடைபாதை மீது மோதியது. இதில் நண்பர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் இப்ராகிம் நவ்வுபல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், படுகாயம் அடைந்த இப்ராகிம் நவ்வுபலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இப்ராகிம் நவ்வுபல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னால் அமர்ந்து வந்த சிவபாரதி லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story