8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பூரில் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான்.
அனுப்பர்பாளையம்
திருப்பூரில் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். தாய் திட்டியதால் இந்த விபரீத முடிவு எடுத்துள்ளான். இந்த அதிர்ச்சியில் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற தாயாரை பொதுமக்கள் காப்பாற்றினர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மாணவன்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி அஸ்வினி. கருத்து வேறுபாடு காரணமாக அஸ்வினி கணவரை பிரிந்து தனது 2 மகன்களுடன் திருப்பூர் பூண்டி ரிங்ரோடு பகுதியில் வசித்து வந்தார். மேலும் அஸ்வினி அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருடைய மூத்த மகன் சாந்தன் (வயது 13) அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
சாந்தன் வீட்டு பாடங்களை சரியாக படிக்காததால் அவருடைய தாய் அஸ்வினி அடிக்கடி கண்டித்துள்ளார். சம்பவத்தன்று வேலைக்கு சென்று இருந்த அஸ்வினி சாந்தனிடம் செல்போனில் பேசியபோது, தான் வேலை முடிந்து வருவதற்குள் வீட்டு பாடங்களை முடிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியதாக தெரிகிறது.
தற்கொலை
இந்த நிலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய அஸ்வினி, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் மகனை கதவைத்தட்டி கூப்பிட்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர் அக்கம்,பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது சாந்தன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தான்.
இதையடுத்து அவனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சாந்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைக்கேட்டதும் அஸ்வினி தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி மருத்துவமனையில் இருந்து ரோட்டிற்கு ஓடினார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை பத்திரமாக அங்கிருந்து அழைத்துச்சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் தாய் திட்டியதால் 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-------------