மாணவர் நல அமைப்பு சங்க தொடக்க விழா


மாணவர் நல அமைப்பு சங்க தொடக்க விழா
x
தினத்தந்தி 7 July 2023 12:15 AM IST (Updated: 7 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவர்களுக்கான நல அமைப்பு சங்கம் தொடக்க விழா கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் நடந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவர்களுக்கான நல அமைப்பு சங்கம் தொடக்க விழா கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் நடந்தது.

மாணவர்கள் நல அமைப்பு

ராமநாதபுரம் புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான மாணவ நல அமைப்பு சங்கம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை தாங்கி பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் கல்வியின் வளர்ச்சியில் சிறந்த முன்னேற்றத்தில் உள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வியுடன் சேர்த்து விருப்பமான போட்டிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களின் ஆர்வத்திறனை கண்டறிந்து அதற்கேற்ப வழிகாட்டும் வகையில் இத்தகைய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஆண்டு 43 பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டு 6 மாத காலத்தில் மாணவ, மாணவிகள் இடையே நல்ல வளர்ச்சியை காண முடிந்தது. நடப்பாண்டில் 293 அரசு பள்ளிகளிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பாராட்டு சான்று

ஒவ்வொரு பள்ளியிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த வகுப்புகளில் சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா போன்ற வண்ணத்தில் எளிதில் அறியும் வண்ணம் குழுவாக பிரித்து அவர்களின் செயல்பாடு குறித்து கண்காணிக்கப்படும். மாணவ, மாணவிகளின் வருகை, பாடங்கள் கவனிக்கும் முறை, சீருடை மற்றும் காலணி முறையாக அணிந்து வருதல், வகுப்பறை, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தல், மதிப்பெண் உள்பட அனைத்தையும் கவனித்து அதற்கு மதிப்பெண்கள் அந்த குழுக்களுக்கு வழங்கப்படும்.

ஒவ்வொரு மாதமும் கணக்கீடு செய்து ஒவ்வொரு பள்ளியிலும் எந்தக்குழு சிறப்பாக செயல்பட்டு அதிக மதிப்பெண்பெற்றுள்ளது என்பதை கண்டறிந்து அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்படும். ஆண்டின் நிறைவில் எந்த குழு முதன்மை பெற்றுள்ளது என்பதை கண்டறிந்து அந்த பள்ளிக்கு பாராட்டு சான்று வழங்கப்படும்.

ஆசிரியர்கள் உறுதுணை

சிலர் பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்று மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பார்கள். அவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு 43 பள்ளிகளில் முதல்முறையாக தொடங்கப்பட்டு நல்ல மாற்றம் தெரிந்துள்ளது. தற்போது அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் இத்திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்தி வரும் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியை பெற்று தர வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, ஆசிரியர் பயிற்சி மைய பேராசிரியர் டேவிட், முகவை சங்கமம் செயலாளர் வான்தமிழ் இளம் பரிதி, மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story