பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு மாணவர்கள் ஆபத்தான பயணம்


பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு மாணவர்கள் ஆபத்தான பயணம்
x
தினத்தந்தி 11 July 2023 12:47 AM IST (Updated: 11 July 2023 5:42 PM IST)
t-max-icont-min-icon

பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி

பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஸ் பயணம்

துறையூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரம் மாணவ-மாணவிகள் துறையூரில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் பள்ளி படிப்பை முடித்துவிட்டு, திருச்சி, பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் தங்களின் கல்லூரி படிப்பை தொடர்கின்றனர்.

இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கிய நிலையில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணாபுரம், கோவிந்தாபுரம், செல்லிபாளையம், மருவத்தூர் ஆகிய பகுதிகள் வழியாக சென்ற பஸ்சில் நேற்று மாலை மாணவ-மாணவிகள் பயணம் செய்தனர். இதில் படியில் தொங்கியவாறு பயணம் செய்த சில மாணவர்கள் காலில் மாட்டியுள்ள காலணியை சாலையில் தேய்த்தவாறு வந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பஸ்சில் இருந்த சக பயணிகள் கூச்சலிட்டுள்ளனர்.

ஆபத்தை உணராமல்..

இதையடுத்து பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் கண்டக்டர் கீழே இறங்கி மாணவர்களை உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அவரின் பேச்சை கேட்காமல் அவர்கள் மீண்டும் படியில் தொங்கியவாறே சென்றனர். இதனை பார்த்த பொதுமக்கள் கூறுகையில், மாணவர்கள் இதுபோன்று நடந்துகொள்வதால் நிலைதடுமாறி கீழே விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. இதனை போக்குவரத்துத்துறை போலீசார் கண்காணித்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

தொடர்ந்து அவர்களின் பெற்றோர்களை அழைத்து எடுத்துரைத்தால் மட்டுமே உயிர் சேதத்தை தவிர்க்க முடியும்.. மேலும் பஸ்களில் நெரிசலில் சிக்கி தவிக்கும் மாணவ-மாணவிகளின் நலன் கருதி துறையூரில் இருந்து கிராமப்புறங்களுக்கும், கிராமப்புறங்களில் இருந்து துறையூருக்கும் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story