பெரம்பலூர் அரசு கல்லூரிக்கு கூடுதல் பஸ் இயக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்


பெரம்பலூர் அரசு கல்லூரிக்கு கூடுதல் பஸ் இயக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்
x

பயணிகள் கூட்டத்தால் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரிக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்

வாக்குவாதம்

குரும்பலூரில் பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு சென்று வர கூடுதல் அரசு பஸ் வசதி செய்து தரக்கோரி ஏற்கனவே மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மதியம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு செல்வதற்காக மாணவர்கள் ஒரு அரசு பஸ்சில் ஏறினர். அவர்கள் பஸ் ஏறும் போதே பின்னால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் டிரைவர் மாணவர்களை உள்ளே வருமாறு கூறியுள்ளார். இதனால் மாணவர்களுக்கும், டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் டிரைவர் தனது செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்களை புகைப்படம் எடுத்ததாகவும், அதனை போலீஸ் நிலையத்தில் காண்பித்து புகார் தெரிவிக்க போவதாகவும் என்று கூறியதாக தெரிகிறது.

சாலை மறியல்

இதையடுத்து அந்த பஸ்சில் பயணம் செய்த மாணவர்கள் கல்லூரி நிறுத்தத்தில் இறங்கினர். பின்னர் அந்த பஸ்சின் முன்பு நின்று தங்களுக்கு கல்லூரிக்கு சென்று வர அரசு பஸ்கள் கூடுதலாக இயக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பேசி கூடுதல் அரசு பஸ் இயக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து கல்லூரிக்கு சென்றனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.


Next Story