வளர்ப்பு யானைகள் முகாமில் ஆய்வு:மலைக்கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்க வனத்துைற தடையாக இருக்காது-அமைச்சர் மதிவேந்தன் தகவல்


வளர்ப்பு யானைகள் முகாமில் ஆய்வு:மலைக்கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்க வனத்துைற தடையாக இருக்காது-அமைச்சர் மதிவேந்தன் தகவல்
x
தினத்தந்தி 5 May 2023 5:30 AM GMT (Updated: 5 May 2023 5:30 AM GMT)

டாப்சிலிப் அருகே உள்ள கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் முகாமில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். அப்போது மலைக்கிராமங்களுக்கு மின்சார வசதி வழங்க வனத்துைற தடையாக இருக்காது என்று தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

டாப்சிலிப் அருகே உள்ள கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் முகாமில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். அப்போது மலைக்கிராமங்களுக்கு மின்சார வசதி வழங்க வனத்துைற தடையாக இருக்காது என்று தெரிவித்தார்.

அமைச்சர் ஆய்வு

ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் அருகே கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இந்த முகாமை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் யானை பாகன்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் அவர்கள் 19 தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

பின்னர் அதிகாரிகளிடம் முகாமில் உள்ள யானைகள் குறித்தும், அவற்றிற்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் யானைகளுக்கு கரும்பு கொடுத்தார். ஆய்வின் போது புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குனர் பர்கவ் தேஜா, உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் சுந்தரவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர். இதை தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பயிர்களுக்கு நிவாரணம்

முதுமலை, கோழிகமுத்தி, சாடிவயல் ஆகிய யானைகள் முகாமிற்கு முதல்-அமைச்சர் தலா ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். யானை பாகன்கள், உதவியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ.10 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டி கொடுக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கோழிகமுத்தி முகாமில் 18 ஆண் யானைகள், 8 பெண் யானைகளும் உள்ளன. இதில் 10 கும்கி யானைகளும் உள்ளன. வனப்பகுதியில் உள்ள மலைக்கிராமங்களுக்கு மின்சார வசதி செய்து கொடுக்க வனத்துறை தடங்கலாக இருக்காது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய ஆவணங்களை கொடுக்க வேண்டும். வன எல்லையையொட்டி உள்ள நிலங்களில் யானைகளுக்கு பிடிக்காத உணவுகளை சாகுபடி செய்ய வேண்டும். வனவிலங்குகளால் பயிர் சேதமானால் உரிய நிவாரணம் வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்டதை விட கூடுதல் நிதி வழங்கப்படுகிறது. கால்நடை டாக்டர்கள் பற்றாக்குறையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் தற்போது யானைகளை உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. யானைகளை அழைத்து செல்ல கூடுதல் வாகனம் கொண்டு வரப்படும். மனித-வனவிலங்குகள் மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story