அம்பத்தூரில் நள்ளிரவில் கடையை மூடச்சொல்லி ஓட்டல் உரிமையாளரை மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்


அம்பத்தூரில் நள்ளிரவில் கடையை மூடச்சொல்லி ஓட்டல் உரிமையாளரை மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
x

அம்பத்தூரில் நள்ளிரவில் கடையை மூடச்சொல்லி ஓட்டல் உரிமையாளரை மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

சென்னை

சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் பிரேம்குமார் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணியளவில் அங்கு சென்ற அம்பத்தூர் போலீஸ் நிலைய சட்டம்-ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் தசரதன் (வயது 50) என்பவர் பிரேம்குமாரிடம் கடையை மூடும்படி கூறினார்.

அதற்கு பிரேம்குமார், "கோர்ட்டு மற்றும் அரசு கடையை திறந்திருக்கலாம் என்று உத்தரவிட்டு இருக்கும் நிலையில் நீங்கள் ஏன் கடையை மூட சொல்கிறீர்கள்?" என்று கேட்டார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தசரதன், ஓட்டல் உரிமையாளர் பிரேம்குமார் மற்றும் கடை ஊழியர்களிடம் தகராறு செய்து, அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பிரேம்குமார், தமிழக டி.ஜி.பி.க்கு 'டுவிட்டர்' மூலம் புகார் தெரிவித்தார். அந்த புகார் மீது விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஆவடி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து புகார் மீது விசாரணை மேற்கொண்டு அறிக்கை பெற்ற ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ராத்தோர், சப்-இன்ஸ்பெக்டர் தசரதனை பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவை குறிப்பிட்டு ஏற்கனவே டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து கடந்த ஜூலை மாதத்தில் சுற்றறிக்கை ஒன்று அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story