தங்கும் விடுதியில் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு


தங்கும் விடுதியில் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
x

கொடைக்கானல் தங்கும் விடுதியில் சப்-இன்ஸ்பெக்டர் திடீரென இறந்தார்.

திண்டுக்கல்

தேனி ஆயுதப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பாஸ்கரன் (வயது 56). இவர், தனது நண்பரான தேனியை சேர்ந்த லெனின் என்பவருடன் நேற்று முன்தினம் கொடைக்கானலுக்கு சென்றார். அப்போது அவர்கள், அங்குள்ள தங்களது நண்பர்களை சந்தினர். பின்னர் இரவு கொடைக்கானல் நாயுடுபுரத்தில் உள்ள தங்கும் விடுதியில் பாஸ்கரனும், லெனினும் தங்கினர்.

இந்தநிலையில் நேற்று காலை கண்விழித்த லெனின், பாஸ்கரனை எழுப்பினார். அப்போது அவர் அசைவற்று கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக விடுதி ஊழியர்களுடன் சேர்ந்து, பாஸ்கரனை கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பாஸ்கரனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தங்கும் விடுதியில் தங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திடீரென்று இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாஸ்கரனின் மனைவி நாகஜோதி கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story